தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் | Bride makes entry to venue in auto rickshaw

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (11/05/2019)

கடைசி தொடர்பு:14:49 (11/05/2019)

தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் குறிச்சித்தனம் பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி கோயிலில்,  மகிமா என்ற பெண்ணுக்கும் சுராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் முழு மேக்கப்புடன் மணப்பெண் வந்து இறங்கியுள்ளார். இதற்குப் பின்னால் உள்ள சுவாரஸ்யம் அம்மாநிலத்தில் ட்ரெண்டாகிவருகிறது. 

கேரளா மணப்பெண்

 

கேரளா, உழவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனன் நாயர். இவர், 1995-ம் ஆண்டில் இருந்து அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அப்போதிலிருந்தே தன் மகளின் திருமணத்துக்கு, மகளையும் மற்ற உறவினர்களையும் ஆட்டோவில் திருமண மண்டபத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தன் தந்தையின் ஆசைப்படி மகள் மகிமாவும், தன் நிச்சயதார்த்த தினத்தன்று தோழிகளுடன் ஆட்டோவில் மண்டபம் வந்துள்ளார். அவர் வந்த ஆட்டோவை மகிமாவே ஓட்டியும் வந்துள்ளார். அதேபோல திருமண நாள் அன்றும் ஆட்டோ ஓட்டிக்கொண்டு கோயிலுக்கு வந்துள்ளார். 

ஆட்டோ ஓட்டிய மணப்பெண்

மகிமாவின் ஆட்டோ முன்னே செல்ல, அதனைப் பின் தொடர்ந்து சுமார் 20 ஆட்டோக்கள் ஊர்வலமாக வந்துள்ளன. மோகனன் தற்போது குடிசைத்தொழில் செய்துவருகிறார். அதனால், அவருக்கு ஆட்டோ ஓட்ட நேரம் கிடைப்பதில்லை என்பதால், அப்போதே தன் மகளுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, அவருக்கு லைசென்ஸும் வாங்கிக்கொடுத்துள்ளார்.  

இந்தக் காலத்தில் திருமணத்துக்காகப் பல லட்சம் செலவுசெய்து, விலையுயர்ந்த காரில் செல்லும் மணமக்கள் மத்தியில், தந்தையின் ஆசைக்காகத் தானே ஆட்டோ ஓட்டிச் சென்ற மணப் பெண்ணின் புகைப்படம், கேரள சமூக வலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்துள்ளது. 

News & Photo Credit : mathrubhumi