ஆட்சியைத் தீர்மானிக்கும் 7 தொகுதிகள்... கைப்பற்றத்துடிக்கும் 3 பேர்... நடப்பது என்ன? | What is the current political situation of Delhi?

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/05/2019)

கடைசி தொடர்பு:15:00 (11/05/2019)

ஆட்சியைத் தீர்மானிக்கும் 7 தொகுதிகள்... கைப்பற்றத்துடிக்கும் 3 பேர்... நடப்பது என்ன?

டெல்லியின் அந்த ஏழு என்பது எப்போதும் மாய எண்தான். அந்த மாயம் செல்லுபடியாவதற்கான காரணம், இந்தியாவின் பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் தலைநகர் டெல்லியில் அவர்களின் கூட்டு மனநிலை தேர்தலில் பிரதிபலிப்பது முக்கியக் காரணமாக இருக்கலாம்.

ஆட்சியைத் தீர்மானிக்கும் 7 தொகுதிகள்... கைப்பற்றத்துடிக்கும் 3 பேர்... நடப்பது என்ன?

டெல்லி தேர்தல் களம் மற்றும் அந்த தேசம் எப்போதும் ஒரு மாயத் தோற்றம் நிறைந்ததுதான். டெல்லி மக்கள் எப்போது யார் பக்கம் நிற்பார்கள், யாருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதை ஒருபோதும் யூகிக்கவே முடியாது. முதல்வன் பட அர்ஜுன் மாதிரி ஒருவர் ஒரேநாளில் டெல்லியில் முதல்வராகவும் முடியும், அதேநேரத்தில் ஆட்சியை இழந்து ஒன்றுமில்லாமலும் போகமுடியும். இதுதான் டெல்லியின் அரசியல் நடைமுறை. இப்படிபட்ட டெல்லியில் மொத்தம் ஏழு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இது டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளோடு ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்கு அளவைவிடக் குறைவுதான். ஆனால், டெல்லியின் அந்த ஏழு  தொகுதிகள்தான் மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கின்றன. இது கொஞ்சம் நம்ப முடியாத கணக்குதான். என்றாலும், ஏற்கெனவே நடந்து முடிந்த ஐந்து மக்களவைத் தேர்தல்களின் முடிவுகளைப் பார்த்தால் அதற்கு விடை தெரிந்துவிடும்.

டெல்லி ஏழு தொகுதிகளுக்கு தேர்தல்

காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவர் முழுமையாக ஐந்தாண்டுக் காலம் பிரதமர் பதவியில் இருந்து ஆட்சியை நிறைவு செய்தது என்றால், 1999-ம் ஆண்டில் பிரதமரான வாஜ்பாய் அரசுதான். அந்தத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் ஆறு தொகுதிகளை பி.ஜே.பி கைப்பற்றியிருந்தது. அதன் பிறகான 2004 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப் பீடத்தில் ஏறியபோது டெல்லியின் ஆறு தொகுதிகள் காங்கிரஸ் வசமிருந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்த நிலையில், டெல்லியின் ஏழு தொகுதிகளையும் தக்கவைத்துக் கொண்டது அக்கட்சி. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றினார். அந்தத் தேர்தலில் டெல்லியின் ஏழு தொகுதிகளையும் பி.ஜே.பி தனதாக்கிக் கொண்டது.  ஆக டெல்லியின் அந்த ஏழு என்பது எப்போதும் மாய எண்தான். அந்த மாயம் செல்லுபடியாவதற்கான காரணம், இந்தியாவின் பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் தலைநகர் டெல்லியில் அவர்களின் கூட்டு மனநிலை தேர்தலில் பிரதிபலிப்பது முக்கியக் காரணமாக இருக்கலாம்.

அரவிந்த் கெஜ்ரிவால்

நாடாளுமன்றத்திற்கு ஆறாம் கட்டத் தேர்தல் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நாளில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகின்றது. இந்நிலையில் டெல்லியின் வெற்றியை மையப்படுத்தி, ஆம் ஆத்மி, பி.ஜே.பி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆம் ஆத்மி தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் கூட்டணி அமையாமல் போனது. இதைப் பலமுறை வெளிப்படையாகவே அறிவித்தார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். “காங்கிரஸ் தன்னுடைய கூட்டணியைப் பலவீனமாக்கி வருகின்றது, இனி காங்கிரஸ் உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை” எனப் பின்னர் அறிவித்தார். அதேபோல் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது, ”மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி அமைந்தால் அதற்குக் காரணம் ராகுல் காந்திதான்” எனக் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட அலட்சியங்களைச் சாடினார் கெஜ்ரிவால்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி  கூட்டணி அமையாமல் போனதற்கு முக்கியமான காரணம்,  மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற உள்ள டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தல்தான். இன்னும் சில மாதங்களில் டெல்லி சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, டெல்லி சட்டமன்றத் தேர்தலைப் பாதிக்கும் என்பதால் ஆம் ஆத்மியுடனான கூட்டணியை தவிர்த்துள்ளது காங்கிரஸ். இந்த மும்முனைப் போட்டி ஒருவகையில் பி.ஜே.பி-க்கு பலம்தான். இதைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, கடந்த தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் டெல்லியில் வெற்றியை நிலைநாட்ட எண்ணுகிறது பி.ஜே.பி. ஒருவேளை காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி ஏற்பட்டிருந்தால், அது காங்கிரஸ் கட்சிக்கான பலமாகக்கூட அமைந்திருக்கலாம், உதாரணமாக, மேற்கு வங்கத்தில் காங்கிரஸை கடுமையாக எதிர்க்கிறார் மம்தா பானர்ஜி. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார். அதுபோல டெல்லியிலும் காங்கிரஸ் கட்சிக்குப் பலம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 

ராகுல் காந்தி

"டெல்லியில் நடப்பது அராஜக ஆட்சி, கெஜ்ரிவாலின் ஆட்சிக் காலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை” என்றார் மோடி. "அதற்குக் காரணமே டெல்லிக்கு மாநில உரிமைகள் வழங்காதுதான்" என மத்திய அரசின் மீது குற்றம் சாட்டினார் கெஜ்ரிவால். தற்போது 'டெல்லியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை' என அந்தப் பகுதி சார்ந்த அரசியலைக் கையில் எடுத்துள்ளார் கெஜ்ரிவால். அதேபோல் டெல்லியின் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் பலம் வாய்ந்ததாகத்தான் உள்ளது. முன்னாள் முதல்வர், கிரிக்கெட் வீரர், குத்துச்சண்டை வீரர், தொழிலதிபர் எனப் பல பிரபலங்கள் டெல்லியின் முக்கியத் தொகுதிகளில் களம் காண்கின்றனர். கூட்டணி அமையாதது, உட்கட்சிப் பூசல், மும்முனைப் போட்டி என்ற குழப்பமான நிலையில்தான் டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்கள் என்ன தீர்மானிப்பார்கள் என்பது விரைவில் தெரியவரும். 

ஆனாலும்.. டெல்லி என்ற மாயத் தேசத்தின் மந்திர சாவி மக்களின் கைகளில்தான் உள்ளது. மே 12-ல் நடைபெறும் வாக்குப்பதிவில் சரியான விடையை அவர்கள் பதிவு செய்வார்கள்.


டிரெண்டிங் @ விகடன்