`பிரியங்கா சோப்ராவின் மெட்கலா தீமில் மம்தா பானர்ஜி மீம்!' - பா.ஜ.க இளைஞரணி பெண் நிர்வாகி கைது | WB BJYM cadre arrested for Priyanka chopra's met gala theme meme on Mamata Banerjee

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (11/05/2019)

கடைசி தொடர்பு:18:11 (11/05/2019)

`பிரியங்கா சோப்ராவின் மெட்கலா தீமில் மம்தா பானர்ஜி மீம்!' - பா.ஜ.க இளைஞரணி பெண் நிர்வாகி கைது

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த உடையுடன் இணைத்து, அவதூறு கிளப்பும் வகையில் மீம் வெளியிட்ட பா.ஜ.க இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 

பிரியங்கா சர்மா பகிர்ந்த மம்தா குறித்த மீம்

ஹாலிவுட் பிரபலங்கள், வித்தியாசமாகவும் விநோதமாகவும் உடையணிந்து ஒப்பனையுடன் கலந்துகொள்ளும் மெட்காலா (MetGala) என்னும் நிகழ்ச்சி, நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். வருடந்தோறும் மே மாதம் முதல் திங்கள்கிழமை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும். அந்த வகையில், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற விழாவில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஆடை, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

பிரியங்கா சர்மா

Photo: DNA India

இந்த நிலையில், மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா புகைப்படத்தில் அவரது முகத்தை மறைத்துவிட்டு, மம்தா பானர்ஜி இருப்பதுபோல் பா.ஜ.க-வின் மேற்குவங்க இளைஞர் அணியைச் சேர்ந்த பிரியங்கா சர்மா என்பவர் மீம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன. ஹவுரா மாவட்ட பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவில் நிர்வாகியான பிரியங்கா சர்மா மீது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிவாஸ் சந்திர ஹஸாரா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கிளப்பும் வகையில் மீம் வெளியிட்ட பிரியங்கா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ஹவுரா போலீஸார் பிரியங்கா சர்மாவைக் கைது செய்துள்ளனர்.