இரண்டு மாதங்களில் 3,621 கோடி..! - சர்ச்சைக்குரிய நன்கொடைப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை | controversy about bjp donation

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/05/2019)

கடைசி தொடர்பு:22:00 (11/05/2019)

இரண்டு மாதங்களில் 3,621 கோடி..! - சர்ச்சைக்குரிய நன்கொடைப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக தொரப்பட்டிருந்த வழக்கும் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சமூக ஆர்வலர் விஹார் துருவுக்கு சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின் படி கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் ரூ.3,621 கோடி மதிப்பிலான தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்றுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய பத்து மாதங்களில் விற்கப்பட்ட தொகையைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரசியல் கட்சி

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை அளிப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனக்கூறி மத்திய அரசு தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் நன்கொடை அளிப்பவர்களின் தகவல்களை வெளியிட வேண்டிய தேவையில்லை என மத்திய அரசு சட்டத்தை திருத்தியிருந்தது. ஆனால், இந்த திட்டத்தில் நன்கொடையாளர்களின் தகவல்களில் வெளிப்படைத்தன்மையே இல்லை எனக்கூறிப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. 

நன்கொடை

இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுத்தன. இந்த திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஆளும் பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் இந்த திட்டத்தை ஆதரித்து வாதாடி வருகிறது. இந்த திட்டம் `ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல, ரத்து செய்யப்பட்டாக வேண்டும்' என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூட விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தேர்தல் சமயத்தில் நன்கொடைப் பத்திரங்கள் மூலம் பெறப்படுகிற நன்கொடைகள் அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டு வந்தன. இத்தகைய சூழ்நிலையில் சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ள தகவல்களின்படி கடந்த மார்ச் (ரூ.1365 கோடி) மற்றும் ஏப்ரல் (ரூ. 2256 கோடி) மாதங்களில் மட்டும் ரூ. 3,621 கோடி மதிப்பிலான தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. 

நன்கொடை

இதில் எவ்வளவு தொகை எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ளது என்பது கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்கிறபோதுதான் தெரியவரும்.