`பா.ஜ.க என்றுமே மோடி, அமித் ஷா கட்சியாக இருந்ததில்லை!' - நிதின் கட்கரி | BJP is not a individual centric party, says Nitin Gadkari

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (11/05/2019)

கடைசி தொடர்பு:20:00 (11/05/2019)

`பா.ஜ.க என்றுமே மோடி, அமித் ஷா கட்சியாக இருந்ததில்லை!' - நிதின் கட்கரி

தனி நபர் ஒருவரை மட்டுமே சார்ந்து பா.ஜ.க இயங்கியதில்லை; அது கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். 

நிதின் கட்கரி

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்டங்கள் நிறைவடைந்து நாளை 6வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 19ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் அதையடுத்து 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.கவும் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர காங்கிரஸும்  தீவிரமாகத் தேர்தல் களத்தில் இயங்கி வருகின்றன. பா.ஜ.க மீது காங்கிரஸ் வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, அது மோடி என்ற ஒரு தனிமனிதரைச் சுற்றியே செயல்படுகிறது என்பதுதான். 

இந்தக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க மூத்த தலைவரும்  மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி விளக்கமளித்திருக்கிறார். டெல்லியில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், `பா.ஜ.க, கடந்த காலங்களில் வாஜ்பாய் அல்லது அத்வானியின் கட்சியாக என்றுமே இருந்ததில்லை. அதேபோல் தற்போது மோடி அல்லது அமித் ஷாவின் கட்சியாக இருந்ததில்லை. பா.ஜ.க என்பது கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது. 

அமித் ஷா - மோடி

ஒரு தனிநபரை முன்னிறுத்தும் அல்லது அவரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சி அல்ல பா.ஜ.க. கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பா.ஜ.கவில் என்றுமே குடும்ப ஆட்சி இருக்காது. மோடியை மையமாக வைத்தே பா.ஜ.க செயல்படுகிறது என்று கூறுவது தவறானது. கட்சியின் நாடாளுமன்றக் குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. 
ஒரு கட்சி வலிமையானதாக இருந்து, அதன் தலைவர் பலவீனமானவராக இருந்தால் தேர்தலில் வெல்ல முடியாது. அதேபோலத்தான் தலைவர் வலிமையானவராக இருந்து கட்சி பலவீனமாக இருந்தாலும் வெற்றி கிட்டாது. மக்கள் மத்தியில் ஒரு தலைவர் செல்வாக்கானவாராக இருந்தால், அவரது பெயர் முன்னிலையில் வரும் என்பது இயற்கையானதுதான்'' என்று கூறியிருக்கிறார் நிதின் கட்கரி.