`அவர் கார்ல இல்லங்க..வீட்ல தான் இருந்தாரு’ - லுக் அலைக் சர்ச்சை குறித்து கம்பீர் நண்பர் விளக்கம்! | Gaurav, a duplicate of gambhir give clarification of photo controversy

வெளியிடப்பட்ட நேரம்: 09:14 (12/05/2019)

கடைசி தொடர்பு:09:14 (12/05/2019)

`அவர் கார்ல இல்லங்க..வீட்ல தான் இருந்தாரு’ - லுக் அலைக் சர்ச்சை குறித்து கம்பீர் நண்பர் விளக்கம்!

நாடு முழுதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழுக் கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார், டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கிழக்கு டெல்லியின் பா.ஜ.க வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான அதிஷிக்கும், கம்பீருக்கும் மிகப்பெரிய வார்த்தை போர் நிலவி வருகிறது.

கௌதம் கம்பீர்

இதற்கிடையில் கடந்த வாரம், கடும் வெயிலில் பிரசாரம் செய்ய முடியாமல், தன்னைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நபரை கம்பீர் பணியமர்த்தி இருப்பதாக ஒரு புதிய சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில்  கம்பீர், காருக்குள் அமர்ந்திருக்க, கறுப்பு நிறத் தொப்பி அணிந்துகொண்டு அவர்போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் மக்களை நோக்கிக் கையசைத்தபடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுபோல் இருந்தது அந்த புகைப்படம். 

வைரலான புகைப்படம்

இந்த புகைப்படத்தை  ஆம் ஆம்தி கட்சி கடுமையாக விமர்சித்து வந்தது. கம்பீரால் பொதுமக்களைக் கூட சந்திக்கமுடியாமல் தன் லுக் அலைக்கை (ஒரே மாதிரி தோற்றம் உடையவர்) வைத்து வாக்கு சேகரிக்கிறார். அவர் எப்படி மக்களுக்காக நல்லது செய்வார் என பல குற்றச்சாட்டுகள் கூறியது. மேலும்  அந்த புகைப்படம் உண்மையா அல்லது போட்டோஷாப் புகைப்படமா என்ற பெரிய விவாதமே சமூகவலைதளங்களில் நடைபெற்றது. 

கம்பீர்

இந்நிலையில் இந்த சர்ச்சை அனைத்துக்கும் விளக்கமளித்துள்ளார் கௌரவ் அரோரா. இவர்தான் கம்பீரின் லுக் அலைக் எனக் கூறப்பட்டவர். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ கம்பீரை எனக்கு 20 வருடங்களுக்கும் மேலாகத் தெரியும். நானும் அவரும் பால்ய காலத்தில் இருந்து நண்பர்கள். அவர் அரசியலில் இறங்கியது முதல் அந்த தொகுதியில் அவருக்காக நான் வாக்கு சேகரித்து வருகிறேன். என்னை கம்பீரின் மாதிரி என்று கூறுவது ஆம் ஆத்மி கட்சியின் மோசமான தேர்தல் தந்திரம். பெரிய சூழ்ச்சி. அன்றைய தினம் கௌதம் கம்பீர் காரில் இல்லவே இல்லை. அவர் வீட்டில்தான் இருந்தார். ஆம் ஆத்மி கட்சி,  கம்பீர் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது. முற்றிலும் பொய்யானது. கம்பீர் என் குடும்பத்தில் ஒருவர் போல அவருக்காக நான் முதல் நாளில் இருந்து வாக்கு சேகரித்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  மேலும்  ‘ நான் அவருடைய தோற்றத்தில் வாக்கு சேகரித்தால் அவர் ஏன் காரில் இருக்கப் போகிறார்” என்றும் கௌரவ் கேள்வி எழுப்பியுள்ளார்.