மோடியை விமர்சித்த 'டைம்...' பதிலுக்கு வரலாற்றைத் திரித்த மோடி ஆதரவாளர்கள்! #FactCheck | Wikipedia page of Aatish Taseer vandalised by BJP supporters in response to the criticism written by him on Modi

வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (12/05/2019)

கடைசி தொடர்பு:08:29 (13/05/2019)

மோடியை விமர்சித்த 'டைம்...' பதிலுக்கு வரலாற்றைத் திரித்த மோடி ஆதரவாளர்கள்! #FactCheck

நரேந்திர மோடியைப் பற்றி காட்டமாக விமர்சித்து கட்டுரை எழுதிய ஆசிரியரின் விக்கிப்பீடியா பக்கத்தை திருத்தி எழுதி அவதூறு பரப்பிய ஆதரவாளர்கள்.

மோடியை விமர்சித்த 'டைம்...' பதிலுக்கு வரலாற்றைத் திரித்த மோடி ஆதரவாளர்கள்! #FactCheck

Time இதழ் இந்தியப் பிரதமர் மோடி குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்தில் பா.ஜ.க ஆதரவாளர்கள் அவர் குறித்த தவறான தகவல்களை எழுதி, அதை வைத்து அவரை விமர்சித்து வருகின்றனர். 

மோடி பற்றிய கட்டுரை எழுதியவரின் விக்கி பக்கத்தை திருத்தி எழுதிய சம்பவம்

Time பத்திரிகையின் சமீபத்திய இதழில் மோடியின் ஐந்து ஆண்டுக்கால ஆட்சி பற்றி அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. 2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்றது, சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய தேர்தல் களத்தில் எவ்வளவு வித்தியாசமானது என்பதையும், காங்கிரஸின் வீழ்ச்சியையும் பேசுகிறது கட்டுரையின் தொடக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்து வந்த மதச் சகிப்புத் தன்மையும், சிறுபான்மையினர் மீதான கட்சியின் தலைவர்களின் வெறியூட்டும் பேச்சுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீதான வன்முறைகள் மீது மோடியின் அமைதியான போக்கு இந்த வெறுப்பூட்டும் பேச்சுகளை வளர்த்துவிட்டதைக் கண்டித்து நாட்டின் ஒருமைப்பாடு சிதைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது அக்கட்டுரையின் அடுத்தடுத்த பகுதிகள். 

இந்தக் கட்டுரை வெளியான உடன் சமூக வலைதளங்களில் மோடி ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் போர் புரியத் தொடங்கிவிட்டனர். 2015-ம் ஆண்டு டைம் இதழில் வெளியான மோடியின் அட்டைப்படக் கட்டுரையையும் இந்த இதழின் அட்டைப்படத்தையும் ஒப்பிட்டு அஸ்ஸாம் காங்கிரஸின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் பதிவிட்டது.

இந்தக் களேபரங்கள் ஒரு பக்கம் நடக்க, இக்கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஸீர் காங்கிரஸின் ஊடகத் தொடர்பாளர் எனக் குறிப்பிட்டு, டைம் இதழ் அதனுடைய நம்பகத்தன்மையை இழந்து இடதுசாரிகளின் ஊதுகுழலாக மாறிவிட்டதாக Chowkidar Shash என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் பகிரப்பட்டது. அந்த ட்வீட் வைரலாக, மீண்டும் மீண்டும் பலரால் இது பதிவிடப்பட்டது. இதற்கு ஆதாரமாக ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்திலிருந்து ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை அவர் இணைத்திருந்தார். 

காங்கிரஸின் ஊடகத் தொடர்பாளர் இப்படி ஒரு கட்டுரையை எழுதியதில் வியப்பில்லை என பா.ஜ.க ஆதரவாளர்கள் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்டை வைத்து கண்டனம் தெரிவித்து வந்தனர். பொதுமக்களே பங்களிக்க முடியும் என்பதையே தனித்துவமாகக் கொண்டு இயங்கி வரும் விக்கிப்பீடியாவில் இந்த வசதியைப் பயன்படுத்தி சிலர் ஆதிஷ் தஸீர் குறித்த தவறான தகவல்களைச் சேர்த்தனர். 

நேற்று காலை 7.59-க்கு முதல் திருத்தத்தை பெயர் குறிப்பிடாத ஒருவர், ஆதிஷ் தஸீரின் பணி குறித்த தகவல்களில் அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஊடகத் தொடர்பாளராகப் பணிபுரிவதாகச் சேர்க்கிறார். அப்படிச் சேர்க்கும் போது PR manger என எழுத்துப்பிழையோடு பதிவு செய்திருக்கிறார். அதிலுள்ள எழுத்துப்பிழை, காலை 8.16-க்கு மீண்டும் பெயர் குறிப்பிடாத ஒரு பயனர் மூலம் சரிசெய்யப்படுகிறது. 

ஆடிஷ் டஸீரின் விக்கிப்பீடியா பக்கத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தம்

கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் அவர் காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் என்றும், அவருடைய புத்தகங்கள் பிராமணர்களை இழிவுபடுத்துவதாகவும் அவருடைய விக்கிப்பீடியா பக்கத்தில் சேர்க்கப்பட்டுக்கொண்டே இருந்தன. முதலில் பொதுவாக அவர் புத்தகங்கள் பற்றிய அவதூறுகள் பதிவிடப்படுகின்றன. அவை நீக்கப்பட்டவுடன் அவருடைய சமீபத்திய புத்தகத்தின் பெயருடன் அவதூறு பரப்பப்படுகிறது. அதுவும் நீக்கப்படுகிறது. பிறகு இதே அவதூற்றை அந்தப் புத்தகம் பற்றிய வேறு ஒரு இணைப்பை சான்றாகக் கொடுத்து பதிவிடப்படுகிறது. உரிய ஆதாரங்களுடன் பதிவிடப்படும்போது அவை நீக்கப்படாது என்பதை மனதில் கொண்டு இப்படி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதுவும் புத்தகம் பற்றிய செய்திப் பதிவு என்பதால் நீக்கப்பட்டிருக்கிறது.

அவர் கடந்த தேர்தலில் மோடிக்குப் பணி புரிந்ததாக ஒருவர் பதிவிட, இன்னொருவர் அவர் சோனியா மற்றும் ராகுல் காந்திக்குப் பணி புரிந்ததாகவும் மாற்றி மாற்றிக் குறிப்பிட்டனர். நேற்றைய விக்கிப்பீடியா பதிவுகளின்படி அவர் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் இந்து மகா சபா ஆகிய கட்சிகளுக்கும் ஊடகத் தொடர்பாளராகப் பணி புரிந்து வருகிறார். 

2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இவருடைய விக்கிப்பீடியா பக்கத்தில் ஒரு மாதத்துக்குச் சராசரியாக 2.3 திருத்தங்கள் மட்டுமே இது வரை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், நேற்று காலையிலிருந்து மட்டும் 78 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

 

இதுவரை மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பற்றிய புள்ளிவிவரம்

இந்தப் பக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை திருத்தங்களையும் இந்தக் காணொளியில் பார்க்கலாம். ஒவ்வொரு திருத்தத்தையும் பார்ப்பதற்கு அந்த காணொளியை நிறுத்தி நிறுத்திப் பார்க்கலாம். அல்லது விக்கிப்பீடியாவின் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம். 

விக்கிப்பீடியாவில் இதுபோல ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் நடைபெறும் பொறுப்பற்ற, பிழையான திருத்தங்களை சரி செய்வதற்காக விக்கிப்பீடியாவின் தொடர் பங்களிப்பாளர்கள் இயங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இது போன்ற திருத்தங்களை உடனடியாக சரி செய்யவும், பழைய நிலைக்கு மாற்றுவதற்காகப் பல தானியங்கி 'பாட்'கள் (Bots) விக்கிப்பீடியா பயனர்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களை Huggle மற்றும் theinstantmatrix என்ற இரு 'பாட்'கள் விரைவாகச் சரிசெய்துகொண்டிருந்தன. இவை தவிர மேலும் சில 'பாட்'களும் சில சின்னச் சின்ன திருத்தங்களை சரிசெய்தன. தொழில்நுட்பத்தில் மனிதர்கள் மேற்கொள்ளும் சில தவறுகளைச் சரிசெய்யவும் நமக்கு அந்த தொழில்நுட்பமே உதவுகிறது. 

இறுதியாக, ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்தில் மே 13-ம் தேதி வரை யாரும் திருத்தங்களை செய்யமுடியாதபடி மாற்றப்பட்டிருக்கிறது. 

தற்காலிகமாக மேற்கொண்டு திருத்தங்கள் செய்யமுடியாதபடி மாற்றப்பட்ட பக்கம்.

ஊடகங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குச் சமூக ஊடகங்களில் இப்படி நடத்தப்படும் தாக்குதல்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என கமென்ட் செய்யுங்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்