`ஹைஃபை அல்லது அரவணைப்பு!' - மாணவர்களை அன்புடன் வரவேற்கும் ஆசிரியை #viralvideo | School teacher greets students with love

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (12/05/2019)

கடைசி தொடர்பு:07:20 (13/05/2019)

`ஹைஃபை அல்லது அரவணைப்பு!' - மாணவர்களை அன்புடன் வரவேற்கும் ஆசிரியை #viralvideo

கடந்த சில நாள்களாக சமூக வலைதளத்தில் பாசிட்டிவ்வான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு பள்ளியில் இருக்கும் சுவரில் நான்கு குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. அவை ஹை ஃபை, ஹார்ட் (இதயம்), பன்ச் (சிறிய அடி), ஹாண்ட் சேக் (கை குலுக்குவது).  பள்ளிக்கு வரும் மாணவர்கள் அங்கு வரையப்பட்டுள்ள குறியீடுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் குறியீட்டை ஆசியர்கள் மாணவர்களுக்குச் செய்வார்.

வைரல் வீடியோ

உதாரணமாக, மாணவர் ஹார்ட் குறியீட்டைத் தேர்ந்தெடுத்தால்,  ஆசிரியர் மாணவரை அரவணைத்துக்கொள்வார். ஹைஃபை குறியீட்டை தொட்டால் மாணவருக்கு ஆசிரியர் ஹைஃபை செய்வார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் ஒரு நொடியேனும் புன்னகைப்பார்கள்.

இதேபோன்ற ஒரு சம்பவம் தெலங்கானாவிலும் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. தெலங்கானாவின் யாதத்ரி புவனகிரி என்ற மாவட்டத்தில் செயல்படும் சமூக நலன் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ரூபா, கோடை விடுமுறையில் நடைபெற்ற முகாமுக்குப் பள்ளி மாணவர்களை இதேபோன்ற முறையில் வரவேற்றுள்ளார். இது மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை வரவேற்கும் ஆசிரியர்

இது பற்றி ரூபா பேசியதாவது, “ இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள். அவர்களுக்கு, குடும்பச் சூழல், வறுமை என நிறைய பிரச்னைகள் இருக்கும்.  அதை அவர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் மாட்டார்கள். ஆனால், நான் அவர்களை அரவணைத்த பிறகு பல மாணவர்கள் அழுதுவிட்டார்கள். அவர்களால் தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. அந்த நாள் எனக்கும் உணர்ச்சிவசமாகவே இருந்தது.  நாங்கள் இதை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றினோம் அதைப் பார்த்த கல்வித் துறை செயலர் இந்த நடவடிக்கையை அனைத்துப் பள்ளிகளும் நடைமுறைப்படுத்த யோசிக்கிறோம் எனக் கூறினார். காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இதேபோன்ற பாசிட்டிவ்வான வரவேற்பு இருந்தால் அவர்களின் நாள் எவ்வளவு இனிதாக இருக்கும். இதனால் மாணவர்களின் மதிப்பெண்களும் உயரும்” எனத் தெரிவித்துள்ளார்.