டெல்லி கூட்டத்தைப் புறக்கணிக்கும் மம்தா..! - பரபரப்பான சூழலில் தள்ளிப்போகிறதா எதிர்க்கட்சிகளின் சங்கமம்? | WB Chief minister may be quits opposition meet on May 21

வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (13/05/2019)

கடைசி தொடர்பு:10:04 (13/05/2019)

டெல்லி கூட்டத்தைப் புறக்கணிக்கும் மம்தா..! - பரபரப்பான சூழலில் தள்ளிப்போகிறதா எதிர்க்கட்சிகளின் சங்கமம்?

மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே ஒரு கட்ட வாக்குப்பதிவுதான் மீதம் இருக்கிறது. வரும் 19-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்கு நடுவில் பா.ஜ.க-வை எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் அனைவரும் டெல்லியில் மே 21-ம் தேதி சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். 

எதிர்க்கட்சிகள்

இதில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பா.ஜ.க எதிர்ப்பு மன நிலையில் இருக்கும் கட்சிகள் சந்திக்கும்படி திட்டம் வகுக்கப்பட்டது. மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளுவார்கள் என்று கூறப்பட்டது. 

இந்தக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளச் செய்வதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனி ஒரு கட்சியாக அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும் ஆட்சி அமைக்கப் போதிய இடங்கள் கிடைக்காது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதன் காரணமாக மோடி எதிர்ப்பு அல்லது பா.ஜ.க எதிர்ப்பு மன நிலையில் இருக்கும் மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் பார்க்கப்பட்டது. 

மம்தா பானர்ஜி

இந்த நிலையில் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் இது தொடர்பாக மம்தா, சந்திரபாபு நாயுடுவுடன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக சந்திக்கும் இந்த முயற்சி பலன் தராது எனவும் இது தேவையற்றது எனவும் கூறியுள்ளாராம் மம்தா. மேலும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதுதான் சரியானதாக இருக்கும். அந்த நேரத்தில் டெல்லியில் முகாமிடுவது தேவையற்றதாக இருக்கும் என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாக்கு எண்ணப்படும் மே 23-ம் தேதிக்குப் பின்னர் இந்தக் கூட்டத்தைக் கூட்டிக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக மே 21-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வாரா என்பது சந்தேகம்தான் என்கின்றனர். 

மம்தா - சந்திரபாபு நாயுடு

இதே மனநிலையில்தான் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாயாவதி ஏற்கெனவே ஒரு பேட்டியில், `தேர்தல் முடிவு வெளியான பின்னர் தேவைப்பட்டால் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன்' என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் எதிர்க்கட்சிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் ரேஸில் இருப்பது தெளிவாகியுள்ளது.

சந்திரபாபு நாயுடு கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19-ம் தேதி அன்று எதிர்க்கட்சித் தலைவர்களை தனித்தனியாகச் சந்திக்க இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டம் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தள்ளிப் போகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.      

ஸ்டாலின் - ராவ் சந்திப்பு

பரபரப்பான இந்த அரசியல் சூழலில்தான் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார். பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத முன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.