"இந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கிளை!" அதிர்ச்சி தகவலால் பரபரப்பு... | islamic state announces its province in india called wilayat hind

வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (13/05/2019)

கடைசி தொடர்பு:12:42 (13/05/2019)

"இந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கிளை!" அதிர்ச்சி தகவலால் பரபரப்பு...

முதல்முறையாக, இந்தியாவில் தங்களது மாநிலத்தை நிறுவியுள்ளதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நிகழ்ந்த இலங்கைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தத் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாகக் கூறியுள்ளனர் ஐ.எஸ் அமைப்பினர். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பை, முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது. 

2013-ன் இறுதிக்கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப் படைகளை எதிர்த்துப் போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின. பேய் வேகத்தில் பரவிய இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014 தொடக்கத்தில் இருந்து இராக்குக்குள் நுழைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அபுபக்கர் அல் பக்தாதி ஐ.எஸ். தீவிரவாத தலைவர்

பிணைக்கைதிகள், அரசின் ஆதரவாளர்களைக் கழுத்தறுத்து, அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவவிடுவதைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தனர். அல்கொய்தா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப, தங்களை ஒரு இஸ்லாமிய அரசாக பிரகடனப்படுத்திக் கொண்டனர். அரசின் கலிபா எனப்படும் தலைவராக ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி அறிவிக்கப்பட்டார். அல்கொய்தாவும் ஒசாமா பின்லேடனும் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப ஐ.எஸ் அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் சிரியாவிலும் இராக்கிலும் மிகப்பெரிய நிலப்பரப்பைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள். 2015 தொடக்கத்தில், 7,000 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட் போடும் நிலையில் அவர்களின் நிதிநிலை இருந்தது. சுமார் 30,000 வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.

2015-ம் ஆண்டு மத்தியில் இராக்கிலும் சிரியாவிலும் அரசுப்படைகள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, ஐ.எஸ் அமைப்பின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும், அவர்களின் அனுதாபிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்படுகின்றனர். நிலங்களில் உள்ள தங்களது ஆளுமை கட்டுப்படுத்தப்பட்டதால், தங்களது இருப்பை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஐ.எஸ் அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவ்வப்போது பல்வேறு நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இஷ்பாக் சோஃபி - ஐ எஸ் தீவிரவாதி

மே 10-ம் தேதி காலை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் அமிஷ்புரா பகுதியில் நடைபெற்ற ‘என்கவுன்டரில்’ இஷ்பாக் சோஃபி என்கிற இளைஞர் கொல்லப்பட்டார். பின்னர், கொல்லப்பட்ட இஷ்பாக் சோஃபி என்பவர் ISJK குழுவைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டது. ISJK என்பது காஷ்மீர் பகுதியில் இருக்கும் ஒரு அமைப்பு. ஆனால், சோஃபியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பல இளைஞர்களின் கைகளில் ஐ.எஸ் அமைப்பின் கொடி இருந்ததும், இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் இந்திய அரசுக்கு எதிராகவும், ஐ.எஸ்-க்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியதும் இந்திய உளவுத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சோஃபியின் உடலில் ஐ.எஸ் இயக்கத்தின் கொடி போர்த்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஐ.எஸ் அமைப்பின் செய்தி நிறுவனமான ‘அமாக் செய்தி நிறுவனம்’, சோபியான் ‘என்கவுன்டர்’ நடைபெற்ற 10-ம் தேதி இரவே ஒரு செய்தியை ஒளிபரப்பியது. அதில், இந்தியாவில் ஐ.எஸ் இயக்கம் ஒரு மாநிலத்தை நிறுவியுள்ளதாகவும், அதற்கு ‘விலாயத் ஹிந்த்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது. இதே செய்தியை, ஐ.எஸ் இயக்கத்தின் மற்றொரு செய்தி நிறுவனமான ‘மோட்டா ஏஜென்சி’யும் உறுதிப்படுத்தியுள்ளது.

விலாயத்  ஹிந்த் அறிவிப்பு

ஐ.எஸ் அமைப்பின் கட்டமைப்பைப் பொறுத்தவரை, பல்வேறு தேசங்களில் அவர்களுக்கு என்று கிளைகள் செயல்படுகின்றன. இவற்றை மாநிலங்கள் என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு கிளைக்கும் ஒரு தலைவர், தளபதிகள், உறுப்பினர்கள் உண்டு. இவர்கள் அனைவருமே ஐ.எஸ் அமைப்பின் தலைவரும் கலிபாவுமான அல்-பக்தாதிக்கு கட்டுப்பட்டவர்கள். இதுவரை கொரஸான் மாநில ஐ.எஸ் கிளையின் கீழ் செயல்பட்டு வந்த இந்திய தீவிரவாதிகள் அனைவரும், தற்போது இந்தியாவுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘விலாயத் ஹிந்த்’தின் கீழ் செயல்படுவார்கள் என அறிவித்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ்.

SITE INTEL நிறுவனத்தின் இயக்குநர் ரீட்டா இதுபற்றி தன் ட்விட்டர் பக்கத்தில், " ISIS மத்திய ஆப்பிரிக்காவில், துருக்கியில் எனப் பல நாடுகளில் இப்படி கிளைகள் ஆரம்பித்துள்ளதாக அடிக்கடி அறிவிக்கிறார்கள். ஆனால், அப்படி எந்த செயல்பாடுகளையும் இவர்கள் அங்கு நடத்துவதாக எந்தத் தகவல்களும் இதுவரையில் வந்ததில்லை. இருந்தாலும் இந்த அறிக்கையை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது" எனக் கூறியிருக்கிறார். 

விலாயத் ஹிந்த் அறிவிப்பு

 

‘விலாயத் ஹிந்த்’ அறிவிப்பை, பாதுகாப்புத் துறையினர் அலட்சியமாகக் கடந்து செல்லக் கூடாது. ஐ.எஸ் அமைப்பினர் எங்கெல்லாம் ஊடுருவியுள்ளனர் என்பதை விரைவாகக் கண்டறிந்து களையெடுத்தால் மட்டுமே, இந்தியாவில் அமைதியை நிலைநாட்ட முடியும்.


டிரெண்டிங் @ விகடன்