அருணாசலப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் புதிய பாம்பு வகை! | New pit viper has been found Arunachala Pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (13/05/2019)

கடைசி தொடர்பு:18:40 (13/05/2019)

அருணாசலப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் புதிய பாம்பு வகை!

ருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்திலுள்ள ராம்டா கிராமத்தில், ஒரு புதிய இன பாம்பைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர் ஊர்வனவியலாளர்கள். புனேவின் அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திலிருந்து, கேப்டன் அசோக்  தலைமையிலான ஆராய்ச்சிக்குழு இதைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு வகை

Photo: Rohan Pandit / Eaglenest Biodiversity Project

ஆராய்ச்சிக்குழுவின் அறிக்கைகளின்படி, பிட் வைப்பர் என அறியப்படும் இந்தப் பாம்பு, சிவப்பு பழுப்புத் தோலுடன், தனித்துவமான வெப்ப உணர்திறனையும் கொண்டிருக்கும். விஷத்தன்மை உடையதும் ஆகும். அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளதால், இந்த இனத்திற்கு, 'ட்ரிமிரெரூஸ் அருணாச்சலலென்சிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ராம்டா கிராமத்திலுள்ள  வனப்பகுதிகளில் பல்லுயிர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது,  உள்ளூரில் குடியிருக்கும் ஒருவர், புதிய வகை பாம்பு ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர், ஆராய்ச்சிக்குழு அந்தப் பாம்பின்  டி.என்.ஏ. ஒப்பீடு மற்றும் உடல்ரீதியான அம்சங்களை ஆய்வுசெய்தபிறகு, இந்தியாவில் பெரும்பாலும் காணப்படும் நான்கு வகை பழுப்புக் குழி விரியன்களான மலபார், ஹார்ஸ் ஷோ, ஹம்ப்-நோஸ் மற்றும் ஹிமாலயன் அல்லாத அறியப்படாத ஒரு புதிய ஆண் இனமாக இந்தப் பாம்பு உள்ளது என அறிவித்தனர்.

புதிய பாம்பு வகை

Photo: Rohan Pandit / Eaglenest Biodiversity Project

இந்த இனத்தில், ஒரே ஒரு பாம்பு மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இனத்தின் வாழ்விடம், இனப்பெருக்கம், உணவு முதலியவைகுறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஆராய்ச்சியாளர்கள் யோசனையில் உள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புகுறித்த தகவல்கள், 'ரஷியன் ஜர்னல் ஹெர்பெட்டாலஜி' இதழில் மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில் வெளியாகியுள்ளது.  டி.என்.ஏ வரிசை முறைகளின்  ஒப்பீட்டுப் பகுப்பாய்வு மற்றும் உருவவியல் அம்சங்களைப் பரிசோதித்ததில், இந்த இனம், இதற்கு முன்பு நாம் கண்டிராதது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இட்டா நகர் மாநில வன ஆய்வுமையத்தின் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்க, இதன் மாதிரி  ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.