`கற்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் கீழே விழுந்தது...' கார்கிலில் கரடிக்கு நேர்ந்த துயரம் | A bear attacked by stones in Kargil

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (13/05/2019)

கடைசி தொடர்பு:19:28 (13/05/2019)

`கற்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் கீழே விழுந்தது...' கார்கிலில் கரடிக்கு நேர்ந்த துயரம்

கரடி

இந்தியா முழுவதும் மனிதர்களால் வன விலங்குகள் தாக்கப்படும் சம்பவங்கள், ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டேபோகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இருக்கும் கார்கில் பகுதியில் கரடி ஒன்று தாக்கப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் பல தரப்பினரையும் கலங்கச்செய்திருக்கிறது. Mahmood Ah Shah என்பவர், அவரது ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோவை கடந்த சில நாள்களுக்கு முன்னால் வெளியிட்டிருக்கிறார். அதில் ஒரு கரடி, மலை மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறது. மேலே இருப்பவர்கள், பெரிய கற்களைக்கொண்டு தாக்குகிறார்கள். அதைத் தாங்க முடியாமல் கரடி ஆற்றுக்குள் விழுகிறது. அதைப் பார்த்து, கற்களை எறிந்த கும்பல் ஆரவாரம் செய்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதைச் சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்ததோடு மட்டுமன்றி, கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தார்கள். ட்விட்டரில் இந்த வீடியோவைப் பகிர்ந்த ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி, இதை மனிதத்தன்மையற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, காயமடைந்த கரடியையும் கற்களை எறிந்தவர்களையும் அதிகாரிகள் தேடிவருகிறார்கள். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.