``தைரியமிருந்தால் மம்தா என்னை கைதுசெய்யட்டும்!" அமித் ஷா விட்ட சவாலுக்குக் காரணம் என்ன? | Amit Shah accused Mamata Banerjee of cancelling his programme

வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (13/05/2019)

கடைசி தொடர்பு:21:05 (13/05/2019)

``தைரியமிருந்தால் மம்தா என்னை கைதுசெய்யட்டும்!" அமித் ஷா விட்ட சவாலுக்குக் காரணம் என்ன?

'நான் கொல்கத்தாவைவிட்டுச் செல்லும்போது, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டுத்தான் செல்வேன். தைரியம் இருந்தால் என்னைக் கைதுசெய்துபாருங்கள்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

அமித் ஷா

கடந்த டிசம்பர் மாதம், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில், மூன்று கட்டங்களாக யாத்திரை நடத்த திட்டமிட்ட பா.ஜ.க மேற்கு வங்க அரசிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், பா.ஜ.க-வின் கோரிக்கையை மம்தா நிராகரித்தார். தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மம்தா தடை விதித்தார். இப்படி மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வை ஆட்டம் காண வைத்து வருகிறார் மம்தா. இதற்கிடையே, மக்களவை ஏழாம் கட்டத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, அமித் ஷா பிரசாரத்திற்காக கொல்கத்தா வந்துள்ளார். இன்றும் அவர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதேபோல ஜாதவ்பூர் தொகுதியில் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 

அமித் ஷா

இதனால், பா.ஜ.க-வுக்கும், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவழியாக பர்கனாசில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது பேசியவர், 'முதலில் இன்று நான் 3 தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பேசுவதாக இருந்தது. அதில் ஒரு தொகுதியில் மம்தாவின் உறவினர் போட்டியிடுகிறார். எங்கே நான் பேசினால் அவர் தோற்றுவிடுவாரோ என்று எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. இப்போது சொல்கிறேன், நான் கொல்கத்தாவைவிட்டுச் செல்லும்போது, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டுத்தான் செல்வேன். தைரியம் இருந்தால் மம்தா என்னை கைதுசெய்துபார்க்கட்டும்' என்றார். 

மம்தா

இதற்குக் காரணம்,  சில நாள்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி காரில் சென்றுகொண்டிருந்தபோது, செல்லும் வழியில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று சிலர் முழக்கமிட்டனர். முழக்கமிட்டவர்களை மம்தாவின் கார் துரத்திச் சென்றது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்தான், இப்போது அமித் ஷாவும் அப்படிச் சொல்லியுள்ளார். மம்தாவுக்கு அமித் ஷா விடுத்திருக்கும் சவால், மேற்கு வங்க அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க