ரூ.1.50 லட்சம் கோடி...114 விமானங்கள்... இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்கா! | F-21 Jets Won't Be Sold To Other country If India Decides To Buy It

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (14/05/2019)

கடைசி தொடர்பு:12:35 (14/05/2019)

ரூ.1.50 லட்சம் கோடி...114 விமானங்கள்... இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்கா!

மெரிக்காவின்  லாக்கிட் மார்ட்டின் நிறுவனம், மீண்டும் ஒரு முறை இந்தியாவுக்கு ஆசையைத் தூண்டியுள்ளது. பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு விமானப்படையின்  பலவீனம் தெரிந்துவிட்டது. பறக்கும் சவப்பெட்டியான மிக்- 21 ரக  விமானத்தைக்கொண்டு இதே லாக்கிட் மார்ட்டின் நிறுவனத்தின் எப் - 16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா சொல்கிறது. பாகிஸ்தானோ மறுக்கிறது. இந்திய விமானப்படையை நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  பிரான்ஸ் நாட்டின்  ரஃபேல் போர்  விமானம் படிப்படியாக இந்தியாவுக்கு வரத் தொடங்கும். தற்போது, இந்திய விமானப்படையில் மிக் - 21, மிக் 23, மிக் 27, சுகோய் , மிராஜ் 2000, தேஜாஸ் ரக  விமானங்கள் உள்ளன. இதில், சுகோய் மட்டுமே கொஞ்சம் லாக்கீட் மார்ட்டின் தயாரிப்புகளுக்கு சற்று ஈடுகொடுக்கக் கூடியது.  மற்றவை மாட்டுவண்டி ரகம்தான். 

போர் விமானம்

இதனால்,  இந்திய விமானப்படை 114 விமானங்கள் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்கத் திட்டமிட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், உலக நாடு ஒன்றால் ராணுவத் தேவைக்கு விடப்பட்ட மிகப் பெரிய டெண்டர் இது. லாக்கீட் மார்ட்டின்,  டசால்ட்,  போயிங் எஃப்.ஏ 18, யூரோ ஃபைட்டர், ரஷ்யாவின் மிக் 35 தயாரிப்பு நிறுவனங்கள் ஒப்பந்தத்தை தட்டிச்செல்ல முயன்றுவருகின்றன. இந்நிலையில், லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் விவேக் லால், டெல்லியில் பி.டி.ஐ நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது,  ''இந்தியா எங்களிடமிருந்து 114  எஃப் -  21 ரக போர் விமானங்களையும் வாங்குமென்றால், நாங்கள் இந்த ரக விமானத்தை வேறு நாட்டுக்கு விற்க மாட்டோம்.  இந்தியா, எங்களின் 165 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புகொண்ட  சர்வதேச போர் விமானங்கள் ஈகோ சேவையில் இணைக்கப்படும்.  இந்த ஒப்பந்தம் எங்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில், டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே எஃப் -21 ரக போர்  விமானத்தைத் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.  எஃப் - 16 பிளாக் 70  ரக விமானத்தைவிட இது தொழில்நுட்பம் , அதிக அளவு ஆயுதங்களை எடுத்துச்செல்லும் திறன் படைத்தது. இந்திய விமானப்படையின் தேவை அறிந்தே நாங்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க