`கேரிபேக்கிற்கு ஏன் 1 ரூபாய் வசூலித்தீங்க, திருப்பிக்கொடுங்க!' - வணிக நிறுவனத்தை அதிரவிட்ட சிறுமி | 13 year old girl protest against lulu hypermarket

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (14/05/2019)

கடைசி தொடர்பு:13:15 (14/05/2019)

`கேரிபேக்கிற்கு ஏன் 1 ரூபாய் வசூலித்தீங்க, திருப்பிக்கொடுங்க!' - வணிக நிறுவனத்தை அதிரவிட்ட சிறுமி

அண்மையில், சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் ரத்தோரி என்பவர், அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு `பாட்டா’ ஷோரூமில் ஒரு ஜோடி செருப்பு வாங்கினார். அதன் விலை 399 ரூபாய். ஆனால், அவரிடம் கடைக்காரர்கள் 402 ரூபாய் வசூலித்தனர். அவர் எடுத்துச்செல்ல வசதியாக வழங்கப்படும் கேரிபேக்குக்காக 3 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கடைக்காரர்கள் விளக்கமளித்தனர். இதற்காக `பாட்டா’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தி காகித கேரிபேக் வாங்க வைப்பது சேவை குறைபாட்டைக் காட்டுவதாகவுள்ளது என்று கூறி, நடந்த சம்பவத்துக்காக 1,000 ரூபாய் அபராதம், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்துக்கு ஈடாக 3,000 ரூபாய், வழக்கு செலவுக்காக 5,000 ரூபாய் என மொத்தம் 9,000 ரூபாய் அபாராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. அத்துடன் `பாட்டா நிறுவனம், இனி கேரிபேக்குளை இலவசமாகவே வழங்க வேண்டும்’ என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. 

பாட்டா நிறுவனம்

இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் நம்மில் பலருக்கு இதுபோன்ற அனுபவம் நிகழ்ந்திருக்கும். பெரிய சூப்பர் மார்க்கெட்களிலிருந்து சின்ன கடைகள் வரை கேரிபேக்கிற்கு பணம் இன்னும் வசூலித்து வருகின்றனர். ஆனால் வணிக நிறுவனங்களின் இந்தப் போக்கிற்கு எதிராக 13 வயதுச் சிறுமி ஒருவர் போராடி வெற்றிபெற்றுள்ளார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஆமி என்பவர் முன்பு ஒரு முறை கொச்சியின் பிரபலமான மாலில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்டிற்கு தாயுடன் சென்றுள்ளார். அங்குப் பொருள்கள் வாங்கியபோது கேரிபேக்கிற்கும் 1 ரூபாய் கட்டணமாக வசூலித்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்தான் `பாட்டா' நிறுவனத்துக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்ட விஷயம் செய்திகளில் வெளிவர அதைக் கவனித்துள்ளார் சிறுமி ஆமி. இதை உதாரணமாக எடுத்துக்கொண்டு மீண்டும் அதே பிரபலமான மாலில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்டிற்கு தாயுடன் சென்றுள்ளார். 

சிறுமி ஆமி

இந்த முறை பில் கவுன்டருக்குச் சென்றவர், கேரிபேக்கிற்கு பணம் வசூலிக்கக் கூடாது என வாதாடினார். இருந்தாலும் ஊழியர்கள் கேரிபேக்கிற்கு 1 ரூபாய் பில்லில் அச்சிட்டு இருந்துள்ளனர். இதனால் கோபமடைந்து மீண்டும் பணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறிக்கொண்டே அங்கு நடந்தவற்றை வீடியோவாகப் பதிவு செய்ய ஊழியர்கள் கேரிபேக்கிற்காக அவரிடம் வசூலித்த 1 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தனர். கூடவே மக்களும் இதேபோல் வணிக நிறுவனங்களுக்கு எதிராகக் கேள்வி எழுப்பி தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என அந்தச் சிறுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அந்தச் சிறுமியின் தந்தை, ``ஒரு ரூபாய் என்பது ஒரு சிறிய பிரச்னையில்லை. அதுவும் பணம்தான். ஆமியின் இந்தப் போராட்டம் மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்டும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு எதிரானது. மக்கள் அவளுக்கு ஆதரவளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

சிறுமி ஆமி

சிறுமி ஆமி இப்போது மட்டும் திடீரென இதுபோன்ற போராட்டங்களைச் செய்யவில்லை. 2015-ம் ஆண்டே தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்தவர் மொபைல் போனில் படத்தை எடுத்ததற்காகப் போராட்டம் நடத்தியவர்தான். இந்த முறை பெரிய நிறுவனம் என்றுகூட பாராமல் அநீதிக்கு எதிராகத் தைரியமாகப் போராடிய சிறுமி ஆமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க