மோடிக்கு ஆதரவாகக் கோஷமிட்ட பா.ஜ.க தொண்டர்கள்! - கைகுலுக்கி வாழ்த்துக் கூறிய பிரியங்கா | Priyanka Gandhi greet supporters of Narendra Modi in madhya pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (14/05/2019)

கடைசி தொடர்பு:15:59 (14/05/2019)

மோடிக்கு ஆதரவாகக் கோஷமிட்ட பா.ஜ.க தொண்டர்கள்! - கைகுலுக்கி வாழ்த்துக் கூறிய பிரியங்கா

நாட்டில் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆறு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் அனைத்துத் தலைவர்களும் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மக்களவை தேர்தலை மையமாகக் கொண்டு அரசியலில் குதித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி

இவர் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிடவில்லை என்றாலும் கட்சிக்காக அனல் பறக்க பிரசாரம் செய்து வருகிறார் பிரியங்கா. அவர் செல்லும் அனைத்து மாநிலங்களிலும் அவருக்குப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், அவர் பிரசாரத்தின் போது பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று அது இணையத்தில் வைரலாகி அதன்மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். 

வைரல் வீடியோ

இவற்றில் ஒன்றாக மத்தியப் பிரதேசத்திலும் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏழாம் கட்ட தேர்தலுக்காக மத்தியப் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரியங்கா காந்தி, நேற்று ரத்ளம் பகுதியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார். அங்கே பிரியங்காவுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் மரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பிரியங்கா சென்றுகொண்டிருக்கும்போது இடையில் பெண்கள் நிறைந்த கூட்டம் ஒன்று அவருக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பியுள்ளனர். உடனடியாக பிரியங்கா காந்தி, தன் பாதுகாவலரின் உதவியுடன் தடுப்புகளைத் தாண்டிக் குதித்து பொதுமக்களின் கூட்டத்துக்குள் சென்று அவர்களுடன் கை குலுக்கி செல்ஃபி எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.

இதே போன்ற மற்றொரு சம்பவத்தில் அதே மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு விமான நிலையம் சென்றுகொண்டிருந்தார் பிரியங்கா. அப்போது சாலையின் ஓரத்தில் சிலர் மோடிக்கு ஆதரவாகவும் காங்கிரஸுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். அவர்கள் முன் காரை நிறுத்தி கீழே இறங்கி வந்து சிரித்த முகத்துடன் மிகவும் சாதாரணமாகத் தனக்கு எதிராகக் கோஷமிட்டவர்களுடன் கை குலுக்கி, வாழ்த்து தெரிவித்துவிட்டு மீண்டும் காரில் ஏறிப் புறப்பட்டுள்ளார். பிரியங்காவின் இந்தச் செயலை சற்றும் எதிர்பார்க்காத பா.ஜ.க-வினர் வாயடைத்து நின்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.