14 வயதில் திருமணம்; பாலியல் வன்கொடுமை! - தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் | My evil husband got me raped by friends'

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (14/05/2019)

கடைசி தொடர்பு:07:49 (15/05/2019)

14 வயதில் திருமணம்; பாலியல் வன்கொடுமை! - தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

பாலியல் வன்கொடுமை


தீயில் வெந்த என் உடம்பை இனி யாரும் விரும்பமாட்டார்கள் எனக் கண்ணீருடன் பேசுகிறார் 3 குழந்தைகளுக்குத் தாயான 24 வயது இளம்பெண். உடம்பில் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன் மற்றும் அவரின் நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தியில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அந்த இளம்பெண் கடந்த சில வருடங்களாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத துன்பத்துக்கு ஆளாகியுள்ளார். குடும்ப வறுமை காரணமாக 2009-ம் ஆண்டு இவருக்குத் திருமணம் நடந்துள்ளது. அப்போது இவருக்கு 14-வயதுதான். தன்னைவிட வயதில் மிகவும் மூத்த நபருக்குத் திருமணம் செய்துகொடுத்துள்ளனர். அதற்காக அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு 10,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்க்கை, தாம்பத்தியம் இதுகுறித்த எந்தப் புரிதலும் இல்லாத சிறுமி பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்துள்ளார்.

பின்னர் இரண்டாவதாகத் திருமணம் நடந்துள்ளது. முதல் திருமணத்தைவிட மிகவும் மோசமான சூழலே இங்கு நிலவியுள்ளது. தன் இரண்டாவது கணவனை அரக்கன் என்றே குறிப்பிடுகிறார். அவனும் அவனது நண்பர்களும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுமார் 20 நபர்களால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். முகத்தில் ஆசிட் வீசி விடுவேன்; குழந்தைகளைக் கொன்று விடுவேன் என மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். குழந்தை இரண்டாவது கணவரிடம் இருப்பதால் இதை அவர் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளார். மூன்று குழந்தைகளில் முதல் குழந்தை முதலாவது கணவருக்கு பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை இரண்டாவது கணவருக்கும் மூன்றாவது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதில் பிறந்துள்ளது. 

குடும்பத்தினரிடம் முறையிட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அங்கேயும் இவர் கைவிடப்பட்டுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 2019 ஏப்ரல் வரை காவல்துறை தரப்பில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் விரக்தியடைந்தவர் கடந்த மாதம் தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவரது வாக்குமூலம் அடிப்படையில் Hapur காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இதுவரை 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்ககோரி உத்தரப்பிரதேச அரசு மற்றும் மாநில டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.