அழகு, ஊட்டச்சத்து, இளமை... பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் கழுதைப்பால் பிசினஸ்! | Donkeys turning into cash cows, transforming fortunes

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (15/05/2019)

கடைசி தொடர்பு:14:03 (15/05/2019)

அழகு, ஊட்டச்சத்து, இளமை... பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் கழுதைப்பால் பிசினஸ்!

கழுதைப் பால்  ஊட்டச்சத்து நிரம்பியது, முதுமையைத் தடுக்கிறது மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் பண்புகளையும் கொண்டிருக்கிறது என்பதால், இதைப் பலரும் வாங்கி அருந்தவும் செய்கிறார்கள். அதாவது அழகு, ஊட்டச் சத்து, இளமை என மூன்று அம்சங்களுக்காக கழுதைப் பால் விற்பனை  அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது.

பாற்கடலைக் கடைந்து தேவர்கள் உண்ட அமுதம் எப்படி இருந்ததோ தெரியவில்லை. ஆனால், இன்றைய யுகத்தின் அமுதம் என்றால், அது கழுதைப்பால்தான் என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்போல. அந்த அளவுக்கு அதில் மருத்துவப் பயன்கள் இருப்பதால், அந்தப் பாலுக்கு கடும் கிராக்கி. 

பாக்கெட்டில் கழுதைப் பால்

கழுதைப்பால் என்றதும், உலகப் பேரழகி கிளியோபாட்ராதான் நினைவுக்கு வருவார். அவர், தன் மேனி அழகை வசீகரமாக வைத்துக்கொள்ள தினமும் கழுதைப்பாலில் குளித்தார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. 

அழகு, ஊட்டச்சத்து, இளமை

தற்போது விஷயம் அதுவல்ல. கழுதைப்பாலை மேனி அழகுக்காக கிளியோபாட்ரா பயன்படுத்தினாரோ இல்லையோ, அது ஒரு சிறந்த உணவாகப் பார்க்கப்படுவதோடு, அழகு க்ரீம்கள், சோப்புகள் மற்றும் ஷாம்பூகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. கொச்சி, புனே, டெல்லி  எனப் பல நகரங்களில், அழகு சாதன பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. ஊட்டச்சத்து நிரம்பியது, முதுமையைத் தடுக்கிறது மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகளையும் கொண்டிருக்கிறது என்பதால், இதைப் பலரும் வாங்கி அருந்தவும் செய்கிறார்கள். அதாவது அழகு, ஊட்டச்சத்து, இளமை என மூன்று அம்சங்களுக்காக இதன் விற்பனை அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது.  

``கழுதைப்பாலில் தயாரிக்கும் எங்களது உயர் ரக அழகு சாதன பொருள்களுக்கு பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வமும் வரவேற்பும் காணப்படுகிறது. நோய்களைக் குணமாக்க முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதை நோக்கி நமது மக்கள் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இதில் பல நல்ல குணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு அது மிகவும் நல்லது. குறிப்பாக, வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் மற்றும் தோல் அலர்ஜியால் பாதிக்கப்படுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது" என்கிறார் அழகு சாதன பொருள்கள் தயாரிப்பு நிறுவனர் ஒருவர். 

ஊட்டச் சத்து கொண்ட கழுதைப் பால்

``கழுதைப்பால், தாய்ப்பாலுக்கு நிகரானது. அதில் வைட்டமின்கள் ஏராளம் உள்ளதோடு, உடலுக்கு அவசியமான கொழுப்பு அமிலமும் உள்ளது. பசும்பாலில் இருக்கும் கொழுப்பைவிட இதில்  குறைவாகவே உள்ளது" என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

`கழுதைப்பாலில் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துகள் உள்ளன' என ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது. சில குழந்தைகளுக்கு, பசும்பாலில் உள்ள புரதம் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அத்தகைய குழந்தைகளுக்கு மாற்றாக கழுதைப்பாலைக் கொடுக்கலாம். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மனிதர்கள் அருந்தத்தக்க பால் பட்டியலில் கழுதைப்பால் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் இன்னும் அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், அழகு சாதன பொருள்கள் தயாரிப்பில் இங்கே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கணிசமானோர் மட்டும் அந்தப் பாலை இந்தியாவில் அருந்திவருகின்றனர்.

88 கிராம் க்ரீம் விலை ரூ. 4,840

இந்த நிலையில், கழுதைப்பால் விற்பனையை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சக அதிகாரி  தருண் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ``பால் விற்பனைக்கான அரசின் ஒழுங்குமுறை அமைப்பு, கழுதைப்பால் விற்பனைக்கு முறைப்படி அனுமதி வழங்கிவிட்டால், நாட்டில் கழுதைப்பால் உற்பத்தி மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்" என்கிறார்கள் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். 

அரசின் முறைப்படியான அனுமதி வருவது ஒருபுறம் இருந்தாலும், கழுதைப்பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருள்கள் விற்பனை மூலம் ஏற்கெனவே பல நிறுவனங்கள் கல்லா கட்டத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் புதுமை விவசாயி விருது பெற்ற அபி பேபி என்பவரின் டால்பின் ஐபிஏ என்ற நிறுவனம்,  தடிப்பு தோல் அழற்சி உடையவர்களுக்காக கழுதைப்பாலில் தயாரிக்கப்பட்ட க்ரீம் ஒன்றை விற்பனை செய்துவருகிறது. 88 கிராம்கொண்ட ஒரு பேக்கின் விலை 4,840 ரூபாய். அதேபோன்று சொறி, சிரங்குக்கான க்ரீம் 6,136 ரூபாய். 200 மில்லி ஷாம்பூ 2,400 ரூபாய் என விற்றுவருகிறது. 

கடந்த 2018-19-ம் நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் டர்ன் ஓவர் 1.15 கோடி ரூபாய்! இது, அதற்கு முந்தைய நிதியாண்டைக்காட்டிலும் 70 சதவிகிதம் அதிகம் என்கிறார் அபி. இவர், கழுதைப்பால் உற்பத்திக்காக கேரள மாநிலம் கொச்சி அருகே இரண்டு ஏக்கரில் கழுதைப் பண்ணை வைத்துள்ளார். 27 கழுதைகள் உள்ளன. இதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கழுதை ரகங்களும் உண்டு. 

அழகு சாதன பொருள்களில் கழுதைப் பால்

100 மில்லி பால் 700 ரூபாய்

இதேபோன்று ஆர்கானிக் பொருள்களை விற்பனை செய்யும் சிந்துஜா என்பவரும், கழுதைப்பாலில் தயாரிக்கப்பட்ட சோப்புகள் அழகு சாதன பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார். இவர், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கான கழுதைப்பாலை டெல்லியை அடுத்த காஜியாபாத், பஞ்சாப் மாநிலத்தின் பார்மர் மற்றும் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள், பழங்குடியினத்தவர்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறார். கழுதைப்பாலுக்கு தற்போது ஏற்பட்டுள்ள கிராக்கியால், மேற்கூறிய இடங்களில் முன்னர் லிட்டர் 500 ரூபாய்க்குக் கிடைத்த கழுதைப்பால், தற்போது 3,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக  சிந்துஜா  தெரிவிக்கிறார். 

 25 கழுதை உரிமையாளர்கள், இவருக்கு கழுதைப்பால் சப்ளை செய்துவருகின்றனர். அவர்களிடம் 100-க்கும் மேற்பட்ட கழுதைகள் உள்ளதாகத் தெரிவிக்கும் சிந்துஜா, இந்த ஆண்டுக்குள் எப்படியும் 100 கழுதைப் பண்ணைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார். இவர் இந்தத் தொழிலில் மட்டும் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். 

வீட்டுக்கே வந்து டெலிவரி

புனேவில், இரண்டாம் தலைமுறை விவசாயியான குமார் ஜாதவ், 100 மில்லி கழுதைப்பாலை 700 ரூபாய்க்கு விற்றுவருகிறார். கைக்குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள், இருமல் பிரச்னை உள்ளவர்கள், வயிறு மற்றும் தோலில் தொற்று உள்ளவர்கள் இவரின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். கழுதைப்பால், கறந்த 8 முதல் 10 மணி நேரத்துக்குள் கெட்டுவிடும் என்பதால், தொலை தூரம் உள்ள வாடிக்கையாளர்கள் என்றால், அவர்களது வீட்டுக்கே கழுதையை அழைத்துச் சென்று பாலைக் கறந்து கொடுத்துவிட்டு வருகிறார். இவரிடம் 12 கழுதைகள் உள்ளன. மாதம் சுமார் 70,000 ரூபாய் வரை இதன் மூலம் சம்பாதிக்கிறார். 

இந்த நிலையில், கழுதைப்பாலைக்கொண்டு அழகு சாதன பொருள்களைத் தயாரிக்கலாம் என்பதையும், ஊட்டச்சத்து பொருள்களிலும் அதைக் கலக்கலாம் என்பதையும் ஒப்புக்கொள்ளும் வேளாண் விஞ்ஞானிகள், இந்தியாவில் கழுதை வளர்ப்பு நல்ல லாபகரமான தொழிலாக வளர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கின்றனர். 

கழுதைப் பண்ணை

இனிமேல் கழுதையைப் பார்த்தால் யோகம் வரும் என்று சொல்வதற்குப் பதிலாக, கழுதையை வளர்த்தால் யோகம் வரும் என்று சொல்லலாம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்