ஆசையாக தந்தை கட்டிய வீடு!- வங்கி அதிகாரிகளின் டார்ச்சரால் பறிபோன தாய், மகள் உயிர் | Unable to repay loan, woman, daughter commit suicide in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (15/05/2019)

கடைசி தொடர்பு:11:50 (15/05/2019)

ஆசையாக தந்தை கட்டிய வீடு!- வங்கி அதிகாரிகளின் டார்ச்சரால் பறிபோன தாய், மகள் உயிர்

டன் கொடுத்த வங்கி மிரட்டியதால், 19 வயது கல்லூரி மாணவி தாயாருடன் சேர்ந்து தீக்குளித்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கி அதிகாரிகளால் தற்கொலை செய்து கொண்ட தாய், மகள்

திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மனைவி லேகா (வயது 42) இந்தத் தம்பதிக்கு ஒரே ஒரு மகள்தான். 19 வயதான அவர் பெயர் வைஷ்ணவி. இவர், பி.பி.ஏ படித்து வந்தார். சந்திரன், வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்தபோது, வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஒரே மகள் என்பதால் எல்லாமே மகள் பெயரிலேயே செய்வதுதான் தம்பதியின் வழக்கம். அதனால் , புதிய வீட்டையும் `வைஷ்ணவி ' என்ற பெயரிலேயே  ஆசை ஆசையாகக் கட்டி வந்துள்ளனர். ஆனால், தம்பதியின் போதாத நேரம், வளைகுடாவில் வேலை பார்த்து வந்த சந்திரனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், சந்திரன் கேரளா திரும்பிவிட்டார். இங்கே, கிடைத்த வேலையைச் செய்து வந்துள்ளார். 

மகள் பெயரில் கட்டி வரும் வீட்டுக்கு ரூ.8 லட்சம் செலுத்தியுள்ள நிலையில், மேலும் ரூ.6.80 லட்சம் செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், சந்திரன் மகள் பெயரில் தாங்கள் கட்டி வந்த வீட்டையும் அதைச் சுற்றி நிலத்தையும் விற்க ரூ. 24 லட்சத்துக்குப் பேரம் பேசியுள்ளார்.  தங்களுக்குச் சொந்தமான நிலத்தை விற்று மே 14-ம் தேதி கடனை அடைத்து விடுவதாகச் சந்திரனின் மனைவி லேகா வங்கி அதிகாரிகளுக்கு உறுதி அளித்துள்ளார். 

ஆனால், நிலத்தை நினைத்ததுபோல விற்க முடியவில்லை. இதனால், வங்கி அதிகாரிகள், லேகாவுக்கு தொடர்ச்சியாகப் போன் செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போவதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக மிரட்டியுள்ளனர். இதனால், பயத்தில் இருந்த லேகா மானம் மரியாதை போய் விட்டதாகக் கருதினார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் வங்கியில் இருந்து மீண்டும் போன் செய்து மிரட்டியுள்ளனர். இதனால், லேகா மகள் வைஷ்ணவியுடன் தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வழியிலேயே வைஷ்ணவி மரணமடைந்தார். லேகா 90 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். 

லோன்

வங்கி அதிகாரிகள் செய்த டார்ச்சரால் தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்யாற்றின்கரை கனரா வங்கி முன் மக்கள் போராட்டம் நடத்தினர். வங்கி அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர். பரசல்லா தொகுதி எம்.எல்.ஏ ஹரீதரன், ``வங்கி அதிகாரிகளிடம் பேசி, நான் அவர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் அளிக்கச் செய்திருந்தேன். அப்போது ஒப்புக்கொண்ட வங்கி அதிகாரிகள் எனக்கு அளித்த உறுதிமொழியைத் தாண்டி தம்பதிக்குத் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளனர். பொறுப்பில்லாத அதிகாரிகளால் இரு உயிர்கள் பரிதாபமாக போய்விட்டன''  என்று வேதனையுடன் குறிப்பிட்டார். 

லேகாவின் கணவர் சந்திரன் கூறுகையில், ``ரூ.8 லட்சம் வரை கடனை அடைத்து விட்டோம். ஆனால், வங்கியிலிருந்து மேலும் 6.80 லட்சம் செலுத்த கூறுகின்றனர். அதோடு, எங்கள் நிலத்தையும் வீட்டையும் கைப்பற்றச் சென்றனர். அப்போது, என் மனைவி லேகா 14-ம் தேதி கட்டுவதாக உறுதி அளித்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தார். நிலத்தை வாங்க ஒப்புக்கொண்டனர். கடைசி நேரத்தில் முடிவை மாற்றியதால் எங்களால் பணத்தைச் செலுத்த முடியாமல் போய் விட்டது. இப்போது, என் மனைவி மகளை இழந்துவிட்டேன் ’’ என்று கதறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க