`அபிநந்தனை 40 மணி நேரம் சித்ரவதை செய்த பாகிஸ்தான் உளவு அமைப்பு?!' - அதிர்ச்சித் தகவல் | Pakistan's ISI tortured IAF pilot Abhinandan, says Ministry sources

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (16/05/2019)

கடைசி தொடர்பு:14:05 (16/05/2019)

`அபிநந்தனை 40 மணி நேரம் சித்ரவதை செய்த பாகிஸ்தான் உளவு அமைப்பு?!' - அதிர்ச்சித் தகவல்

பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைபிடித்து வைத்திருந்தபோது அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, அவரை 40 மணி நேரம் சித்ரவதை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அபிநந்தன்

இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை மிக் 21 ரக விமானத்தில் இந்திய விமானப்படை வீரர் விங்க் கமாண்டர் அபிநந்தன் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி துரத்திச் சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக விமானம் தாக்குதலுக்கு உள்ளாகவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவர் தரையிறங்க நேர்ந்தது. இதையடுத்து, அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. அவர் இஸ்லாமாபாத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சிறைபிடிக்கப்பட்டு 58 மணி நேரத்துக்குப் பின்னர் அவர், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது அவர், கையில் தேநீர் கோப்பையுடன் அந்நாட்டு ராணுவத்தினர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான வீடியோ ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டது. அதேபோல், பாகிஸ்தான் ராணுவத்தை அவர் புகழ்ந்து பேசுவதுபோலவும் ஒரு வீடியோ வெளியானது. 

இந்தியா வந்தபின்னர் அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில், இரண்டாவது வீடியோ போலியானது என்று தெரியவந்தது. இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், இரண்டாவது வீடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்றும் அதை சோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அபிநந்தன் கூறியதாகத் தகவல் வெளியானது. 
அதேபோல், பாகிஸ்தான் வசம் இருந்தபோது அபிநந்தனை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, சுமார் 40 மணிநேரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபிநந்தன்

`மிகவும் பிரகாசமான விளக்குகள் மற்றும் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் கருவிகள் கொண்ட அறையில் அபிநந்தனை ஐ.எஸ்.ஐ அமைப்பு அடைத்து வைத்திருந்தது. ஒவ்வோர் அரை மணிநேரத்துக்கு ஒரு முறை அந்த அறைக்குள் ஒருவர் சென்று, அபிநந்தனை அடித்திருக்கின்றனர்'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது. இஸ்லாமாபாத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த அபிநந்தனை, அங்கிருந்து 4 முதல் 5 மணிநேரம் பயண தொலைவில் உள்ள ராவல்பிண்டிக்கு ஐ.எஸ்.ஐ அமைப்பு கொண்டுசென்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு டெல்லியில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.