‘அடிக்கிறாங்க அண்ணா... காப்பாற்றுங்கள்’ - சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தெலங்கானா இளைஞர் | Telangana youth trapped in Saudi Arabia

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (16/05/2019)

கடைசி தொடர்பு:16:37 (16/05/2019)

‘அடிக்கிறாங்க அண்ணா... காப்பாற்றுங்கள்’ - சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தெலங்கானா இளைஞர்

தெலங்கானா மாநிலம், ராஞ்சனா ஸ்ரீசில்லா மாவட்டம் இலந்தகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான சமீர். இவருக்கு சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் வேலை வாங்கித் தருவதாக ஒரு ஏஜென்ட் இவரிடம் தெரிவித்துள்ளார். சவுதியில் பண்ணை வீட்டில் வேலை எனவும் அதற்கு 1,200 ரியாத்கள் (இந்திய ரூபாயில் 22,000) வழங்குவதாகவும் சவுதி செல்ல 80,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமீரும் பணம் வழங்கியுள்ளார். இறுதியில் அவருக்கு விசா, விமான டிக்கெட்டுகள் என அனைத்தும் வந்து அவரும் ஏப்ரல் 17-ம் தேதி ரியாத் சென்றடைந்துள்ளார். 

இளைஞர் சமீர்

எதிர்கால கனவுடன் வெளிநாடு சென்ற அவருக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அங்கு சமீருக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை அழுதபடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள சமீர், “பண்ணையில் வேலை எனக் கூறிதான் என்னை அழைத்து வந்தார்கள். ஆனால், எங்கேயோ பாலைவனத்தில் என்னை ஆடு மேய்க்கச் சொல்கிறார்கள். கடந்த 20 நாள்களாக எனக்கு உணவு, தண்ணீர் என எதுவுமே தரவில்லை. உணவு கேட்டால் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். கே.டி.ஆர் அண்ணா நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்றுங்கள். இங்கு யாருமே இல்லை நான் மட்டுமே உள்ளேன். பயமாக உள்ளது காப்பாற்றுங்கள். இங்கே நான் செத்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை. தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் அண்ணா. காலில் விழுந்து கேட்கிறேன் என்னை இந்தியா அழைத்துச் செல்லுங்கள்’ எனக் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

கே.டி.ஆர் ட்வீட்

இந்த வீடியோவை தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ஆரை டேக் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த இரண்டு நாளாகத் தெலங்கானவில் சமீர் வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டது.  இதைக் கவனித்த கே.டி.ஆர் சவுதி அரேபியாவின் இந்திய தூதர் அவுசத் சயீத் உதவியைக் கோரியுள்ளார். கே.டி.ஆரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து சவுதியில் உள்ள இந்தியர்கள் சமீருக்கு உதவி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்திய வெளியுறவுத்துறையும் கே.டி.ஆரின் வேண்டுகோளுக்குப் பதில் அளித்துள்ளது.