`இனிப்பான லாபத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்' - முருகப்பா குழுமத்தின் டர்ன்ஓவர் அதிகரிப்பு! | murugappa group turn over increased 12%

வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (16/05/2019)

கடைசி தொடர்பு:21:12 (16/05/2019)

`இனிப்பான லாபத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்' - முருகப்பா குழுமத்தின் டர்ன்ஓவர் அதிகரிப்பு!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் முருகப்பா குழுமத்தின் டர்ன்ஓவர் 2018-19 நிதியாண்டில் 12% வளர்ச்சியடைந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.36,893 கோடியாக உள்ளது. இந்தக் குழுமத்தில் மொத்தம் 28 நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் 9 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தக் குழுமத்தைச் சேர்ந்த கோரமண்டலம் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம் 19% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. புதிய உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அறிமுகம் செய்துள்ளது.

எம்.எம்.முருகப்பன்

முருகப்பா குழுமத்தின் அங்கமான ஈ.ஐ.டி பாரி நிறுவனத்தின் வளர்ச்சி 28% சரிவடைந்துள்ளது. பருவ மழை பொய்த்துப்போனதாலும், உள்நாட்டிலும், உலக அளவிலும் சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பினால் ஏற்பட்ட விலைச்சரிவின் காரணமாகவும் நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எட்டுச் சர்க்கரை ஆலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு சர்க்கரை ஆலைகளுக்குப் போதிய அளவுக்குக் கரும்பு கிடைக்கவில்லை. புதுச்சேரியில் உள்ள சர்க்கரை ஆலையும் இதேபோன்ற நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது. 

``உலக அளவில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதன் தேவைப்பாடு சற்று குறைவாக உள்ளது. எனினும் விரைவில் இந்த நிலைமாறி, மீண்டும் சர்க்கரை உற்பத்தியும், தேவைப்பாடும் சீராகி இனிப்பான லாபத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்" என்று முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர் எம்.எம்.முருகப்பன் கூறினார்.