`கவலைப்படாதீர்கள் என்றேன்!’ - ஊரடங்கு நேரத்தில் கர்ப்பிணியைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் | Defying Curfew In Assam, Auto Driver Takes Pregnant Woman To Hospital

வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (16/05/2019)

கடைசி தொடர்பு:20:59 (16/05/2019)

`கவலைப்படாதீர்கள் என்றேன்!’ - ஊரடங்கு நேரத்தில் கர்ப்பிணியைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்

பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண்ணை, ஊரடங்கு உத்தரவையும் தாண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிகிறது. 

பெண்

அஸ்ஸாம் மாநிலம் ஹலாகண்டி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை மோதல் வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.

காவல்துறை

அப்பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க காவல்துறை சார்பில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனால் பலத்த கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நந்திதா என்பவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, நந்திதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு கால் செய்தும் வரவில்லை. நேரம் ஆக ஆக, பிரசவ வலி அதிகமானது. அவரின் கணவர் ரூபான், அக்கம் பக்கத்தினரை அழைத்தும் பயனில்லை. யாரும் உதவ முன்வரவில்லை. இந்தத் தகவலை அறிந்து, அந்தப் பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் மக்பூல் என்பர் அங்கு வந்தார்.

ஊரடங்கு உத்தரவு குறித்தெல்லாம் கவலைப்படாத அவர், நத்திதாவை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். உரிய நேரத்தில் அழைத்து வந்ததால் நந்திதாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு `சாந்தி’ என்று அவர்கள் பெயரிட்டனர். இதையறிந்துகொண்டு அப்பகுதிக்கு வந்த மூத்த காவல் அதிகாரி கீர்த்தி ஜலி, ``இந்து - முஸ்லிம் ஒற்றுமை பலம்பெற வேண்டும்’ என்று கூறி, மக்பூலை பாராட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ரூபன், ``என் மனைவி நந்திதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

பெண்

வலியால் அவள் அலறினாள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். அவளைச் சமாதானம் செய்ய முயன்றேன். அக்கம் பக்கத்தினரை அழைத்து உதவி கேட்டேன்; ஆனால், அவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. நிச்சயம் யாராவது உதவிக்கு வருவார்கள் எனக் கூறினேன். அப்போதுதான் மக்பூல் வந்தார். அவர் ஆட்டோவில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மோசமான சாலையிலும் விரைவாக மருத்துவமனைக்குச் சென்றார். இரு சமூகத்துக்கு இடையேயான கலவரத்தின்போது பிறந்ததால் மகளுக்கு, `சாந்தி’ என்று பெயர் வைத்தேன்” என்றார். மக்பூல் கூறும்போது, ``எல்லாம் நல்லபடியாக முடியும் கவலைப்பாடதீர்கள் என்று சொல்லிக்கொண்டே ஆட்டோவை ஓட்டினேன். இறைவன் அருளால் எல்லாம் நல்லதாகவே முடிந்தது” என்றார்.