``நிரூபியுங்கள்; இல்லை என்றால் சிறையில் தள்ளுவோம்!’ - மோடியை எச்சரித்த மம்தா பானர்ஜி | Mamata Banerjee rejecting PM Modi's offer of a new Vidyasagar statue

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (17/05/2019)

கடைசி தொடர்பு:09:15 (17/05/2019)

``நிரூபியுங்கள்; இல்லை என்றால் சிறையில் தள்ளுவோம்!’ - மோடியை எச்சரித்த மம்தா பானர்ஜி

நாட்டின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் பல மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்ட தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பா.ஜ.க-வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறி கல் வீச்சு, வாகனங்களுக்குத் தீவைக்கும் வரை சென்றது.

அமித்ஷா பேரணி

அன்று நடந்த கலவரத்தின்போது கொல்கத்தா வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் உள்ள வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் சீர்திருத்தத்துக்குப் பெரும் பங்காற்றியவர் வித்யாசாகர் ராவ். மேற்கு வங்கத்தின் ஓர் அடையாளமாக திகழ்ந்த வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையானது. அவர் சிலை உடைக்கப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். 

உடைக்கபப்ட்ட வித்யாசாகர் சிலை

இதற்கிடையில் நேற்று உத்தரப்பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, ``மேற்கு வங்கத்தில் அமித் ஷா பங்கேற்ற பிரசார கூட்டத்தின்போது அங்குள்ள வித்யாசாகரின் சிலையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே உடைத்தனர். சிலையை உடைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும். வித்யாசாகர் சிலை இருந்த அதே இடத்தில் ஐம்பொன்னால் ஆன வேறு ஒரு சிலை நிறுவப்படும். இதுதான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு நல்ல பதிலடியாக இருக்கும்” எனப் பேசினார்.

மோடி

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்குப் பதிலளித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``மோடி, தான் கலந்துகொள்ளும் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார். இப்படிப் பொய் கூறுவதற்காக அவர் தன் காதைப் பிடித்துக்கொண்டு ஒரு லட்சம் தோப்புக்கரணம் போட வேண்டும். கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பொய் கூறுகிறார். அவர், உடைந்த வித்யாசாகர் சிலையை மறு சீரமைப்பு செய்வதாக அறிவித்துள்ளாராம். உங்களிடம் நாங்கள் எப்போதும் கையேந்த மாட்டோம். எங்கள் மாநிலத்தில் போதுமான நிதி உள்ளது. அதை வைத்து நாங்களே சிலையை மீண்டும் கட்டிக்கொள்வோம்.

மம்தா பானர்ஜி

கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள்தான் மத்தியில் ஆட்சி செய்துவருகிறீர்கள். முன்னதாக நீங்கள் ராமர் கோயில் கட்டப்படும் என உறுதியளித்தீர்கள். ஆனால், இந்த ஐந்து வருடத்தில் அதை உங்களால் செய்யமுடியவில்லை. நீங்களா வித்யாசாகர் சிலையை கட்டப்போகிறீர்கள். மோடி 200 வருட பாரம்பர்யத்தை உடைத்துவிட்டார். அவரால் அதை மீட்டெடுக்க முடியுமா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் சிலையை உடைத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். எங்களிடம் அனைத்து வீடியோக்களும் உள்ளன. அதை நாங்கள்தான் செய்தோம் என நீங்கள் நிரூபிக்காவிட்டால் உங்களைச் சிறையில் தள்ளுவோம். எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவையே அனைத்து உண்மைகளையும் பேசிவிடும்” என கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.