சாம்பார் வடையில் கிடந்த பல்லி... நாக்பூரில் உணவகத்துக்கு `சீல்’ வைத்த அதிகாரிகள்! | Haldiram’s outlet shut after finds dead lizard

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (17/05/2019)

கடைசி தொடர்பு:11:12 (17/05/2019)

சாம்பார் வடையில் கிடந்த பல்லி... நாக்பூரில் உணவகத்துக்கு `சீல்’ வைத்த அதிகாரிகள்!

நாக்பூரிலுள்ள பிரபல ரெஸ்டாரன்டில் ஆர்டர் செய்த சாம்பார் வடையில் செத்த பல்லி ஒன்று இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பார் வடையில் பல்லி

கடந்த செவ்வாயன்று வார்தாவைச் சேர்ந்த யாஷ் அக்னிஹோத்ரி என்பவர், தன் குடும்பத்தோடு நாக்பூரிலுள்ள அஜானி சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரெஸ்டாரன்டுக்கு சாப்பிடச் சென்றுள்ளார். அந்த ரெஸ்டாரன்டில் ஆர்டர் செய்த சாம்பார் வடையை வாங்கிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. தட்டிலிருந்த சாம்பாரில் ஒரு செத்த பல்லி கிடந்தது. உடனே ரெஸ்டாரன்டின் மேலாளரை அழைத்துப் புகாரளித்தவர், அந்தப் பல்லி விழுந்த சாம்பார் வடையைப் புகைப்படமெடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். உடனே அந்த புகைப்படம் வைரலானது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் நேரடியாக ரெஸ்டாரன்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், உணவு தயாரிக்குமிடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜன்னல்களில் வலை அடிக்கப்படாமல் பல்லிகள், பூச்சிகள் எளிதில் நுழைய ஏதுவாக இருந்தது. எனவே, அனைத்துப் பாதுகாப்பு வசதிகளும் சீர்செய்யும்வரை திறக்கக்கூடாதென உத்தரவிட்டு அந்த ரெஸ்டாரன்டுக்கு சீல் வைத்து மூடினர். ரெஸ்டாரன்டின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த ரெஸ்டாரன்டில் உணவருந்தியவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு 24 மணி நேரக் கண்காணிப்பில் வைத்திருக்கப்பட்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.