மக்களவைத் தேர்தலின் கிங் மேக்கரா நவீன் பட்நாயக்? - பரபரக்கும் அரசியல் களம்! | Naveen Patnaik Could Play Kingmaker After election result

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (17/05/2019)

கடைசி தொடர்பு:16:00 (17/05/2019)

மக்களவைத் தேர்தலின் கிங் மேக்கரா நவீன் பட்நாயக்? - பரபரக்கும் அரசியல் களம்!

வீன் பட்நாயக் என்கிற ஒரு முதல்வர் உண்டு. அவருக்கு என்று தனியே ஒரு குணம் உண்டு. தமிழகத்தில், பலருக்கும் இவரைத் தெரியாது. மம்தா போலவோ கெஜ்ரிவால் போலவோ தடாலடி முதல்வர் இவர் கிடையாது. தன் மாநிலத்துக்கு எது தேவையோ அதை ஸ்கெட்ச் போட்டு அடிப்பார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் 23-ம் தேதி வெளியாகின்றன. நவீன் இந்தப் பக்கமும் இல்லை; அந்தப் பக்கமும் இல்லை என்கிற நிலையில், மதில் மேல் பூனையாக இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா சமீபத்தில் பிரசாரத்தில் பேசியதுபோது, `மம்தா ஆட்சி புரியும் மேற்கு வங்கம்போல நவீன் பட்நாயக்கின் ஒடிசாவில் வன்முறைகள் நிகழ்வதில்லை ' என்று நேரடியாகவே பாராட்டினார்.

மோடியுடன் நவீன் பட்நாயக்

ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்துக்கு 20 எம்.பி-க்கள் உள்ளனர். இந்த முறை, மேலும் அதிக எம்.பி-க்களை நவீன் பெற்றால் கிங் மேக்கராக மாற வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே, கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில்தான் நவீன் பட்நாயக் இருந்தார். பின்னர், கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை. சோனியா காந்தி வரும்  23-ம் தேதி கூட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவசியம் பங்கேற்குமாறு நவீனுக்கும் தூது அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நவீன் நிச்சயமாகப் பிடிகொடுக்க மாட்டார். தனக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுப்பி வைப்பார் என்று பிஜு ஜனதா தள தரப்பில் சொல்லப்படுகிறது. 

பாரதிய ஜனதா கட்சிக்கு நவீன் மேல் எப்போதும் ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. மோடியும் நவீன் பட்நாயக்கும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு நெருக்கம் கொண்டவர்கள்தான். ஃபானி புயலுக்கு முன்னதாகவே ரூ.1000 கோடி புயலுக்குப்பின் ரூ.1000 கோடி உடனடி நிவாரணமாக மத்திய அரசு அறிவித்ததில் கொஞ்சம் அரசியலும் உள்ளது. ஃபானி புயலின்போது, 14 லட்சம் மக்களை அப்புறப்படுத்தி உயிர்ப்பலியை குறைத்த நவீன் பட்நாயக்கை பிரதமர் மனதாரப் பாராட்டினாலும், தேர்தல் முடிவுக்குப் பிந்தைய கூட்டணிக் கணக்கும் பாராட்டில் மறைந்தே உள்ளது.

பிரதமருடன் நவீன் பட்நாயக்

நவீன் பட்நாயக்கைப் பொறுத்தவரை ஒரே டீல்தான் பேசுவார். ஒடிசாவுக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் எதிர்பார்ப்பார். தன் மாநிலத்துக்குக் கேட்பதை யார் தருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைக்கவே விரும்புவார். ஒடிசாவில் 21 மக்களவை தொகுதியையும் பிஜு ஜனதா தளம் கைப்பற்றும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சி அவரை வளைத்துப் போடவே பார்க்கும். கிங் மேக்கராக சந்திரபாபு நாயுடு முதல் பலரும் முனையலாம். ஆனால், உண்மையிலேயே கிங் மேக்கராக மாறும் வாய்ப்பு ஒடிசா முதல்வருக்கு மட்டுமே உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க