''கடைசி நேரத்தில் மோடி பிரஸ்மீட் ஏன்?'' - கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சிகள்! | Why modi appeared in press conference at the last moment?

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (17/05/2019)

கடைசி தொடர்பு:20:50 (17/05/2019)

''கடைசி நேரத்தில் மோடி பிரஸ்மீட் ஏன்?'' - கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சிகள்!

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். தேர்தல் பரப்புரையின் கடைசி நாளன்று மோடி பத்திரிகையாளர்களை எதற்காகச் சந்தித்தார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மோடி

நாடாளுமன்றத் தேர்தலின் ஏழாம்கட்ட வாக்குப்பதிவில் 59 தொகுதிகளில் விரைவில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன. அதற்கான கடைசிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் மற்றும் பி.ஜே.பி தலைவர் அமித்ஷா இருவரும் கூட்டாகச் சேர்ந்து டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். ''இந்த நாட்டின் வரலாற்றில் நீண்ட காலத்துக்கு பிறகு, அபாரமான மெஜாரிட்டியுடன் இரண்டாவது முறையாகத் தொடர்ந்து நாங்கள் ஆட்சி அமைப்போம். கடந்த தேர்தலில் முடிவுகள் வெளியானபோது காங்கிரஸ் வெற்றிபெறும் என்று பந்தயம் கட்டி இருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய தொகையை இழந்தனர். இந்த முறையும் அதைக் காணலாம்'' என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் பேசினார்.
 

ராகுல்

இதேநேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துவந்தார். பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பைத் தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்துக்கொண்டே பத்திரிகையாளர்களிடம் பேசிவந்தார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், ''மோடி கடைசியாகச் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டார். இப்படி கடைசிநேரத்தில் செய்தியாளர்களைப் பிரதமர் சந்திப்பது மரபு கிடையாது. தனது பதவிக் காலத்தில் முதல் முறையாகச் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். ஆனால், ரஃபேல் ஊழல் தொடர்பாக என்னுடன் விவாதிக்க வருமாறு மோடியைப் பலமுறை அழைத்திருக்கிறேன். இதுவரை அதற்கு மோடி பதில் சொல்லவில்லை'' என்று ராகுல் தெரிவித்தார்.