143 பொதுக்கூட்டங்கள்; 1.5 கோடி மக்கள் - மோடியின் 50 நாள் பிரசாரத்தை விவரிக்கும் அமித் ஷா | Modi addressing 142 rallies in the last 50 days says amit sha

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (18/05/2019)

கடைசி தொடர்பு:10:01 (18/05/2019)

143 பொதுக்கூட்டங்கள்; 1.5 கோடி மக்கள் - மோடியின் 50 நாள் பிரசாரத்தை விவரிக்கும் அமித் ஷா

இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆறு கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நாளை பல மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்வு பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிப் பிரசாரமும் அதுதான். இதன் காரணமாக நேற்று டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

மோடி -அமித் ஷா

இதில் பேசிய பா.ஜ.க தலைவர் அமித் ஷா, ``இந்த மக்களவைத் தேர்தலுக்காக வரலாற்றில் இல்லாத அளவில் பா.ஜ.க பிரசாரம் செய்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இதுதான் முக்கியமான தேர்தல். கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை உணர்கிறார்கள். ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கான திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. 133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது மோடி அரசு” என்று கூறினார். 

மோடி பிரசாரம்

தொடர்ந்து பேசிய அவர், ``மார்ச் மாதம் 28-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் மோடியின் முதல் பிரசாரம் தொடங்கியது. தொடர்ந்து ஐம்பது நாளுக்குப் பிறகு மத்தியப் பிரதேச மாநிலத்தின் கார்கோனில் இன்றுடன் (நேற்று) தன் இறுதிப் பிரசாரத்தை நிறைவு செய்தார். இந்த ஐம்பது நாள்களாக பிரதமர் மோடி 143 பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் கலந்துகொண்டு நாடு முழுவதும் சுமார் ஒன்றரைக் கோடி மக்களிடம் பேசியுள்ளார். 10,000 பா.ஜ.க மூத்த  தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

பா.ஜ.க மூத்த தலைவருடன் மோடி 

மோடி, தான் பிரசாரம் மேற்கொண்ட ஒவ்வொரு நாளும் 100 முதல் 500 கிலோ மீட்டர் வரை தரை வழியாகவும், வான் வழியாகவும் பயணம் செய்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி ஒரே நாள் மட்டும் சுமார் 4,000 கி.மீ பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அன்று குஜராத்தின் அம்ரேலி, கர்நாடகாவின் பாகல்கோட் மற்றும் சிகோடி, கேரளாவின் திருவனந்தபுரம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுள்ளார்.  

மோடி பேரணி

அவர் தினமும் வெயில், மழை, குளிர் என எதையும் பார்க்காமல் பிரசாரம் மேற்கொண்டார். 40 முதல் 46 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பயணம் செய்துள்ளார். அதிகபட்சமாக மே 8-ம் தேதி 46 டிகிரி செல்சியஸ் உச்ச வெப்பத்தில் மத்தியப்பிரதேசத்தில் மக்களைச் சந்தித்தார். அதேபோல் மார்ச் 30-ம் தேதி 18 டிகிரி செல்சியஸ் குளிரில் அருணாசலப் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டார். ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க பிரசாரத்தில் மக்கள் கூட்டம்

மோடி மட்டுமல்லாது பா.ஜ.க நிர்வாகிகள், தலைவர்கள் எனப் பலரும் கடந்த ஆறு மாதங்களாகவே இந்தியா முழுவதும் பயணித்து நாடாளுமன்றத் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த 15,682 நிர்வாகிகள் நாடு முழுவதும் உள்ள பல கோடி மக்களுக்கு மோடி அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர உதவியுள்ளனர். பல ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் இணையம், சமூக வலைதளங்கள் வழியாக பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளனர். பா.ஜ.க வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய பிரசாரமாக இருந்தது” எனப் பேசியுள்ளார். 

பிரசாரத்தின் பிரதமர்

பிரதமர் மோடி மட்டுமல்லாது பா.ஜ.க-வைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்களும் நூற்றுக்கணக்கான பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். அமித் ஷா ஒரு நாளுக்கு 1000 கி.மீ பயணம் செய்து இதுவரை 161 பேரணிகள் மற்றும் 18 பெரும் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் 129 பேரணிகளிலும், நிதின் கட்கரி 56 பேரணிகளிலும், சுஷ்மா ஸ்வராஜ் 23 பேரணிகளிலும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 135 பேரணிகளிலும் கலந்துகொண்டுள்ளனர்.