இந்துக் கடவுள்களை அவமதித்ததாக அமேசான் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு! | Noida police registers FIR against Amazon

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (18/05/2019)

கடைசி தொடர்பு:14:35 (18/05/2019)

இந்துக் கடவுள்களை அவமதித்ததாக அமேசான் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு!

இந்து மதத்தவரின் மனதைப் புண்படுத்தியதாக அமேசான் நிறுவனத்தின்மீது நொய்டா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த கழிப்பறை இருக்கைக் கவர்கள், கால் மிதியடி விரிப்புகள் போன்றவற்றில் இந்து மதக் கடவுளர்களான சிவன், விநாயகர் போன்றோரின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்துக்கள் தினமும் வணங்கும் கடவுளர்களை அமேசான் நிறுவனம் அவமானப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்தனர்.

அமேசான்

இதையடுத்து, விகாஷ் மிஸ்ரா என்பவர் நொய்டா காவல்நிலையத்தில், மதங்களுக்கு இடையே பகைமையை உருவாக்குவதாகக்கூறி அமேசான் நிறுவனத்தின்மீது அளித்த புகாரின்பேரில், செக்சன் 153A பிரிவின்படி குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியபோது, ``வெளிநாட்டு நிறுவனமான அமேசான், இந்துக் கடவுளர்களின் படங்களை மிகவும் மோசமான முறையில் பயன்படுத்தி, தனது பொருள்களை விற்பனை செய்ய முற்படுகிறது. இதன்காரணமாக எப்போது வேண்டுமானாலும் சமூகத்தின் பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படலாம். எனவே இத்தகைய தவறை திரும்பத் திரும்ப அந்த நிறுவனம் செய்யாதபடி அந்த நிறுவனத்தின்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகாரளித்துள்ளேன்" என்றார்.

அமேசான்

இதுகுறித்து அமேசான் தரப்பில் கூறும்போது, இப்படிப் பிரச்னை ஏற்படுத்தக்கூடிய பொருள்களை யாராவது எங்கள் இணையதளத்தில் விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றும், அந்தப் பொருள்களும் விற்பனையிலிருந்து அகற்றப்படும் என்றும் விளக்கமளித்தார்கள். அதேபோல் அமேசான் இணையதளத்தில் விற்பனையிலிருந்து அந்தப் பொருள்கள் நீக்கப்பட்டுள்ளன.