“29 ஆண்டுகளுக்குப் பிறகு கேதர்நாத்தில் தியானம்!" - பரவசத்தில் உருகிய மோடி | modi done meditation in kedarnath temple after 29 years

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (18/05/2019)

கடைசி தொடர்பு:19:10 (18/05/2019)

“29 ஆண்டுகளுக்குப் பிறகு கேதர்நாத்தில் தியானம்!" - பரவசத்தில் உருகிய மோடி

29 ஆண்டுகளுக்குப் பிறகு கேதர்நாத்தில் தியானம் மேற்கொண்டது, பிரதமர் மோடியை பரவசத்தில் ஆழ்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலின் கடைசிக்கட்டத் தேர்தல் நாளை மே 19-ம் தேதி நடைபெறுகிறது. மே 17-ம் தேதியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சூறாவளிப் பிரசாரம் செய்துவந்த தலைவர்கள் ஓய்வுக்காக ஒதுங்கத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ஜோதி ஆதித்ய சிந்தியா, சசி தரூர் ஆகியோர் அமெரிக்கா பறந்துள்ள நிலையில், பிரதமர் மோடி கேதர்நாத் பக்தி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கேதர்நாத்திலும் நாளை பத்ரிநாத்திலும் பயணம் மேற்கொள்பவர், அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்கிறார்.

இளமைக் காலத்தில் கேதர்நாத்தில் மோடி

உத்தரகாண்ட் மாநிலத்துக்கும் மோடிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்னர், 1985-90 காலகட்டங்களில் கேதர்நாத் சிவன் கோவிலுக்கு அருகேயுள்ள கருட சட்டி ஆசிரமத்தில்தான் தங்கியிருந்தார். தினமும் கோயிலுக்கு வந்து தியானம் மேற்கொள்வது மோடியின் வழக்கம். அரசியலில் கால் பதித்த பிறகு, கேதர்நாத்துக்கும் மோடிக்குமான உறவு ஒருசில பயண நேரங்களாகச் சுருங்கிவிட்டது.

மோடி ஆய்வு

2014-ல் மோடி பிரதமரான பின்னர், மூன்று முறை கேதர்நாத்துக்குப் பயணமாகியுள்ளார். மே 2017-ல் கேதர்நாத் கோயில் நடைதிறப்புக்கு வந்தவர், அதே ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நடை மூடும் வைபவத்துக்கும் வருகை தந்திருந்தார். மீண்டும் 2018 நவம்பரில், நடை மூடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கேதர்நாத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அப்போது கேட்டறிந்தார். மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நான்காவது முறையாகத் தற்போது மீண்டும் கேதர்நாத் வந்துள்ளார் பிரதமர் மோடி.

மோடி எடுத்த புகைப்படங்கள்

 

இன்று காலை டேராடூன் விமானநிலையம் வந்தடைந்த பிரதமர், சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக கேதர்நாத் வந்தார். தனது பயணத்தின் போது, தான் எடுத்த புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உற்சாகமானார். சாம்பல் நிற நீல அங்கி, இடுப்பில் காவி துணி, தலையில் பாரம்பர்ய உத்தரகாண்ட் தொப்பி அணிந்தபடி வந்த மோடியை உத்தரகாண்ட் மாநில அதிகாரிகள் வரவேற்றனர். முன்னதாக, பிரதமரின் பயணம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் அலுவலகம் தகவல் அனுப்பியிருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பிரசாரம் மேற்கொள்வது போன்ற செயல்களுக்குக் கட்டுப்பாடுகள் இருப்பதை நினைவுபடுத்திய தேர்தல் ஆணையம், அரசுமுறைப் பயணத்துக்கு எந்தத் தடையுமில்லை எனப் பிரதமரின் பயணத்துக்கு அனுமதி வழங்கியது.

கேதர்நாத்தில் மோடி

 

ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. நடந்தே கேதர்நாத் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி, கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அவர் கையோடு கொண்டு வந்திருந்த சிறப்பு அங்கவஸ்திரங்கள் சிவலிங்கத்துக்கு அணிவிக்கப்பட்டன. சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக பூஜை புரிந்தவர், தனது வழிபாட்டை முடித்துக்கொண்டு, கேதர்நாத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பிரதமர் மோடி

2013-ம் ஆண்டு நிகழ்ந்த நிலச்சரிவு, வெள்ளத்தில் கேதர்நாத் கோயிலைச் சுற்றியிருந்த பகுதிகள் முற்றிலும் நாசமடைந்தன. பக்தர்கள் தங்குமிடம், குடிநீர் தொட்டிகள் போன்ற கட்டமைப்புகள் சிதிலமடைந்தன. இவற்றை மீண்டும் நிர்மானிப்பதற்கான திட்டத்தை தனது 2017 நவம்பர் பயணத்தின்போது மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். தற்போது அப்பணிகளின் நிலை குறித்து உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் உத்பால் குமாரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

வளர்ச்சிப் பணிகள் குறித்து மோடி ஆய்வு

 

ஆய்வை முடித்துக்கொண்ட பிரதமர், கோயிலிலிருந்து 400 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு செயற்கை குகைக்குப் பயணமானார். பிரதமரின் அறிவுறுத்தலின் பெயரில் கட்டப்பட்ட குகையாகும் இது. கோயிலிலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இக்குகை, பக்தர்கள் தியானம் மேற்கொள்ளவும், கோயிலின் அழகை பார்த்தபடி மனதை லயிக்கவும் ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ளது. குகைக்குள் நுழைந்தவுடனேயே சிறிது நேரம் தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஜன்னல் வழியாக கேதர்நாத் கோவில் கோபுரத்தைப் பார்த்து வணங்கினார். கடைசியாக 1990-ல் தான் கேதர்நாத்தில் மோடி தியானம் மேற்கொண்டிருந்தார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு, கேதர்நாத்தில் தியானம் செய்தது பிரதமரின் மனதைப் பரவசப்படுத்தியிருப்பதாக உத்தரகாண்ட் மாநில பி.ஜே.பி-யினர் மகிழ்ச்சி பொங்குகிறார்கள்.

தியான குகை

தியான குகை

இக்குகையில் தங்க விரும்பும் பக்தர்கள், ‘கார்வால் மண்டல் விகாஸ் நிகாம்’ அலுவலகம் மூலமாக ஆன்லைனில் புக் செய்யலாம். ஐந்து மீட்டர் நீளத்திலும் மூன்று மீட்டர் அகலத்திலும், ஒருவர் மட்டுமே தங்கக்கூடிய வகையிலும் குகை வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்குகையிலேயே சுடுதண்ணீர், டெலிபோன், கழிவறை வசதிகள் உள்ளன. இன்றைய இரவை இக்குகையிலேயே தங்கியிருந்து, கேதர்நாத் கோயிலின் அழகை ரசிக்கவிருக்கிறார் பிரதமர் மோடி.

தியான குகையில் மோடி

இந்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்பட்ட குகையில், மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஜெய் ஷா என்பவர் முதன்முதலில் தங்கினார். அதற்குப் பிறகு, தங்கும் இரண்டாவது நபர் பிரதமர் மோடிதான். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை ‘கார்வால் மண்டல் விகாஸ் நிகாம்’ அலுவலகம் செய்துள்ளது. இன்றைய இரவை இக்குகையில் கழிக்கும் மோடி, நாளைக் காலையில் பத்ரினாத் கோயிலுக்குப் பயணமாகிறார். மோடியின் இரண்டு நாள் பயணத்தால், கேதர்நாத், பத்ரிநாத் கோயில்கள் உச்சக்கட்ட பாதுகாப்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.