‘ஸ்டிக்கருக்கெல்லாம் இலவசம் கிடையாது மேடம்’ - அமைச்சரின் மனைவியை வெளுத்து வாங்கிய சுங்கச்சாவடி ஊழியர் | Andra pradesh Minister Pulla Rao’s wife argues at toll staff in Mangalagi

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (19/05/2019)

கடைசி தொடர்பு:12:14 (19/05/2019)

‘ஸ்டிக்கருக்கெல்லாம் இலவசம் கிடையாது மேடம்’ - அமைச்சரின் மனைவியை வெளுத்து வாங்கிய சுங்கச்சாவடி ஊழியர்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நுகர்வோர் பாதுகாப்பு வழங்கல் துறையின் அமைச்சராக இருப்பவர் ப்ரதிபதி புல்லா ரெட்டி. கடந்த வெள்ளிக்கிழமையன்று இவரின் மனைவி பி.வி குமாரி குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள காஸா சுங்கச்சாவடியில் பணம் செலுத்த மாட்டேன் எனவும் தான் அமைச்சரின் மனைவி என்பதால் பணம் செலுத்தாமல் தன் வாகனத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாதம் செய்துள்ளார்.

வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அமைச்சரின்  மனைவி

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் அமைச்சரின் மனைவி சுங்கச்சாவடி ஊழியரிடம், “ நீங்கள் தேவையில்லாமல் வாதம் செய்கிறீர்கள்” எனக் கூறுகிறார். அதற்கு ஊழியர், ‘ நான் செய்யவில்லை நீங்கள் தான் விதண்டாவாதம் செய்கிறீர்கள். உங்களுக்கு எதற்கு இலவசம் வழங்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்புகிறார்.  “ நான் அமைச்சரின் மனைவி காரில் எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது பாருங்கள் அதனால் எங்களைப் பணம் இல்லாமல் செல்ல அனுமதியுங்கள்” என குமாரி கூறுகிறார். அதற்கு அந்த ஊழியர்  “ நீங்கள் எம்.எல்.ஏ கிடையாது. அவரின் மனைவி மட்டுமே. வண்டியில் உள்ள ஸ்டிக்கருக்கெல்லாம் இலவசம் வழங்க முடியாது. எம்.எல்.ஏவுக்கு மட்டும் தான் இலவசம் உள்ளது. உங்களுக்கு கிடையாது. பணம் செலுத்திவிட்டு இங்கிருந்து செல்லுங்கள்” எனக் கூறுகிறார். 

வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அமைச்சரின்  மனைவி

 பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. ஸ்டிக்கருடன் கூடிய பிரமுகர்கள் வி.ஐ.பி இலவச பாஸ் பெறுகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் அமைச்சரின் மனைவி என்ற போதிலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் பணிகளில் உறுதியாக இருந்தனர். இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தைத் தொடர்ந்து குமாரி அமைச்சரின் உதவியாளருக்குப் போன் செய்து சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் பேசும் படி தெரிவித்துள்ளார். உதவியாளர் பேசியும் அதை ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் பணம் செலுத்திய பின்னரே அமைச்சரின் மனைவி விடுவிக்கப்பட்டார்.