`கடவுளிடம் எதையும் கேட்டதில்லை!' - கேதர்நாத்தில் பிரதமர் மோடி | PM Modi Pray For Poll Victory In Kedarnath?

வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (19/05/2019)

கடைசி தொடர்பு:16:02 (19/05/2019)

`கடவுளிடம் எதையும் கேட்டதில்லை!' - கேதர்நாத்தில் பிரதமர் மோடி

கேதார்நாத் பயணத்தின்போது தியானம் செய்த மோடி இன்று காலை பத்ரிநாத்துக்குச் சென்றார். பத்ரிநாத் பயணத்தை முடித்துக்கொண்டு மாலை டெல்லி திரும்புகிறார். இதனிடையே தியானத்தில் தான் என்ன வேண்டிக்கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மோடி

`இனி கொஞ்சம் இளைப்பாறலாம்’ என்று பேசிய பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த கையோடு டெல்லியிலிருந்து புறப்பட்டுவிட்டார். இரண்டுநாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று கேதார்நாத் சென்ற அவர்,  பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார். பின்னர் கேதார்நாத் கோயிலில் காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார்.

மோடி

அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். அவர் தியானம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இரவு முழுவதும் தியானத்தில் ஈடுபட்ட அவர், இன்று காலை பத்ரிநாத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ``இரண்டுநாள்கள் தனியாக நேரம் செலவழிக்க அனுமதியளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. இந்த கோயில்களுக்கு வருகை தந்தது எனக்கு கிடைத்த பாக்கியம் மற்றும் கௌரவமாக நினைக்கிறேன். நான் தனிமையில் நேரத்தை செலவிட்டு, இதுவரை செய்த வேலைகளை எண்ணிப்பார்த்துக்கொண்டேன்.

தியானம்

எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. கேதர்நாத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தோம். கடவுளிடம் எனக்காக எதையும் வேண்டிக்கொள்ளவில்லை” என்றார். தேர்தல் வெற்றி தொடர்பாக வேண்டிக் கொண்டீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ``இல்லை. கடவுள் நம் அனைவரையும் நல்ல திறன் உள்ளவர்களாக இருக்கச்செய்யவேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காவும் தான் பிரார்த்தித்தேன். நான் கடவுளிடம் எதையும் கேட்டதில்லை

பயணம்

நான் தியானம் செய்யும்போது, உலகத்துடனான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விடுகிறது. எந்தவித தொடர்பும் இருப்பதில்லை.  சிறிய ஜன்னல் மட்டும்தான். அதன் வழியாக கோயிலைக் காணமுடியும். அவ்வளவே!” என்றார். பிரதமரின் இந்த பயணம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,``தேர்தல் நடத்தை விதிமுறைகளை எதிரானது” சாடியுள்ளார்.