`இந்த புரளியை நம்பப் போவதில்லை!' - கருத்துக்கணிப்புகளைச் சாடும் மம்தா #Exitpoll2019 | exit poll reactions

வெளியிடப்பட்ட நேரம்: 20:58 (19/05/2019)

கடைசி தொடர்பு:21:00 (19/05/2019)

`இந்த புரளியை நம்பப் போவதில்லை!' - கருத்துக்கணிப்புகளைச் சாடும் மம்தா #Exitpoll2019

மக்களவைத்தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

மோடி

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி (இன்று) வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இவைதவிர தமிழகத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கோவாவின் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.  இந்த கருத்துக்கணிப்பில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

கருத்துக்கணிப்பு


ராகுல்காந்தி, ``வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல், தேர்தல் தேதி, நாமோ டிவி, இப்போது கேதார்நாத்தில் நாடகம். இப்படியாக பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்தது வெளிப்படையாக தெரிந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையும், பயமும் இனி இல்லை” என கூறியுள்ளார். 

ராகுல்

மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ``தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்பு என்னும் வதந்தியை நான் நம்புவதில்லை. மக்களை திசைதிருப்பவும், இந்த வதந்திகள் மூலம் ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றும் கேம் தான் இது. அனைத்து எதிர்கட்சிகளும் வலுவாகவும் ஒற்றுமையாகவும், துணிவுடனும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தடைகளுக்கு எதிராக போராடுவோம்” என்று பதிவிட்டிருக்கிறார். 

மம்தா


ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ``எல்லாக் கருத்துக்கணிப்புகளும் தவறாக இருக்க முடியாது. டிவியை ஆஃப் செய்துவிடுங்கள். சமூகவலைதளங்களை லாக்அவுட் செய்துவிடுங்கள்.உலகம், தன் அச்சில்தான் சுழலுகிறதா என்பதை மே 23ம் தேதி பார்த்துவிடலாம்'' என பதிவிட்டுள்ளார்.