`மோடியின் நாடகம்; சரணடைந்த தேர்தல் ஆணையம்!’ - கடுமையாக விமர்சித்த ராகுல்! | Election Commission has surrendered to Modi, rahul says

வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (20/05/2019)

கடைசி தொடர்பு:08:42 (20/05/2019)

`மோடியின் நாடகம்; சரணடைந்த தேர்தல் ஆணையம்!’ - கடுமையாக விமர்சித்த ராகுல்!

இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. இந்தத் தேர்தல் தொடங்கியது முதல் பெரும் தேசிய கட்சிகளான பா.ஜ.கவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதற்கிடையில் காங்கிரஸ், பா.ஜ.க இல்லாமல் மூன்றாவதாக ஓர் அணி அமைக்கும் வேலைகளிலும் மற்ற கட்சிகள் ஈடுபட்டு வந்தன. இப்படிப் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது மக்களவை தேர்தல்.

ராகுல் பிரசாரம்

மற்றொரு புறம், ஏழு கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவின் போதும் பல வாக்குச்சாவடிகளில் ஏராளமான பிரச்னைகள் நடைபெற்றன. கலவரம், வாக்கு இயந்திரம் கோளாறு, மறு வாக்குப்பதிவு, போராட்டம் எனப் பல விஷயங்கள் நடைபெற்றன. மேலும் பிரசாரத்தின் போது அரசியல் தலைவர்களின் சர்ச்சை கருத்து, தற்போதைய அரசை எதிர்க்கட்சிகள் சாடுவது, எதிர்க் கட்சியினரை ஆளும் கட்சிகள் சாடுவது எனப் பிரசாரமும் அனல் பறக்க நடந்தது. இப்படி களேபரமாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. 

ராகுல் காந்தி

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``தொடக்கத்தில் தேர்தல் பத்திரங்கள், வாக்கு இயந்திர மோசடி, நமோ டிவி, மோடி ஆர்மி, இறுதியில் கேதார்நாத்தில் மோடி நடத்திய நாடகம் வரை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது தேர்தல் ஆணையம் மோடி மற்றும் அவரது கும்பலிடம் சரணடைந்துவிட்டது என இந்திய மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. தேர்தல் ஆணையம் மீது இருந்த பயமும் மரியாதையும் போய்விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

ட்வீட்