கருத்துக்கணிப்பு எதிரொலி! - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு | Within 60 secs, Rs 3.2 lakh crore added to investor kitty as exit polls see NDA win 

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (20/05/2019)

கடைசி தொடர்பு:14:21 (20/05/2019)

கருத்துக்கணிப்பு எதிரொலி! - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு

'பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்' என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவால், பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே சென்செக்ஸ் புள்ளிகள் கிடுகிடுவென உயர்ந்ததால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள  நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவால், மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே சென்செக்ஸ் புள்ளிகள் கிடுகிடுவென உயர்ந்ததால்,  சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள  நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. 

சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரிப்பு

இதனால், சந்தை மூலதனம் 3,18,000 கோடி ரூபாய் அதிகரித்து 1,49, 76, 896 ரூபாயைத் தொட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தபோது, இதன் மதிப்பு 1,46,58,710 ரூபாயாகக் காணப்பட்டது. உள்நாட்டு பங்குகளின் சந்தை மதிப்பு மட்டும் 5.39 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. 

காலை 9.20 மணி அளவில் சென்செக்ஸ் 962 புள்ளிகள் அதிகரித்து 38892.89 ஆகக் காணப்பட்டது. அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 287 புள்ளிகள் அதிகரித்து 11,648 ஆக காணப்பட்டது. இதுவே நண்பகல் 12.15 மணி அளவில் 1013 புள்ளிகள் அதிகரித்து  38944.34  ஆக காணப்பட்டது. நிஃப்டி 302 புள்ளிகள் அதிகரித்து 11710 ஆகக் காணப்பட்டது. 

இன்றைய ஏற்றத்தில் அதிகம் ஆதாயமடைந்த பங்குகளில், எஸ்பிஐ வங்கி, லார்சன் அண்டு டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்டு வங்கி உள்ளிட்டவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். 

வரும் நாள்களில் இந்த ஏற்றம் இன்னும் அதிகரிக்கலாம் என்றும், சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொடும் என்றும் தரகு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இதனால், முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

பங்குச் சந்தையில் காளை பாய்ச்சல்

முன்னதாக, நேற்று வெளியான பல்வேறு ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் ( exit poll) பா.ஜ.க கூட்டணி, மெஜாரிட்டிக்குத் தேவையான 272 இடங்களைத் தாண்டி 306 இடங்கள் வரை பிடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க