`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்!' - இப்படிப் புகழ என்ன காரணம்? | Differently abled man delivering food in rajastan

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (20/05/2019)

கடைசி தொடர்பு:16:05 (20/05/2019)

`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்!' - இப்படிப் புகழ என்ன காரணம்?

பல மெட்ரோ நகரங்களில் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை சில ஆப்களின் பெயர் பொறிக்கப்பட்ட, சில குறிப்பிட்ட நிறங்கள் கொண்ட டி-சர்ட் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உணவுடன் தங்களின் வாகனத்தில் பறந்துகொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு பொதுமக்களின் பல வேலைகளும் குறைந்துவிட்டது என்பதற்கு இது ஒரு சாட்சி. 

உணவு டெலிவரி ஆப்கள்

ஸ்விக்கி, ஜொமோட்டோ, உபர் போன்ற உணவு டெலிவரி ஆப்கள் வந்த பிறகு, பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சமைப்பதில்லை. போனில் ஆர்டர் செய்தால் உணவு வீடு தேடி வந்துவிடும். இது போன்ற ஆப்களால் ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். உணவு டெலிவரி ஆப்களுக்கு என்னதான் எதிர்ப்புகள் இருந்தாலும் மற்றொரு புறம் சில நல்ல விசயங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன

இந்த ஆப்கள் பிரபலமான பிறகு, பல லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இதற்குக் குறைந்த அளவிலான கல்வித் தகுதி மட்டுமே போதுமானதாக இருப்பதால் நிறைய படிக்காத பலரும் எளிதாக இதில் இணைந்து உணவு டெலிவரி செய்து வருகின்றனர். குடும்பத்தை விட்டுப் பெரு நகரங்களில், தனியாக வேலை செய்யும் இளைஞர்களுக்கு உணவு டெலிவரி ஆப்கள் தான் மூன்று வேளையும் உணவு அளிக்கிறது. 

டெலிவரி செய்யும் மாற்றுதிறனாளி

இப்படி நல்ல விஷயங்களின் உச்சமாக ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நடந்து அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, நாம் ஆர்டர் செய்த உணவு குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் தாமதமானால் அதைக் கொண்டுவந்தவரை நாம் திட்டி தீர்த்துவிடுவோம். ஆனால், அந்த வீடியோவிலும் ஒருவர் உணவு டெலிவரி செய்கிறார். அவர் தாமதமாக உணவு கொண்டுவந்தால் நமக்குக் கோபம் வராது மாறாக ஆச்சர்யமாக மட்டுமே இருக்கும். ராஜஸ்தானைச் சேர்ந்த ராமு என்ற மாற்றுத்திறனாளி ஜொமோட்டோ நிறுவனத்தின் மூலம் தன் மூன்று சக்கர வாகனத்தை கைகளால் இயக்கி தினமும் உணவு டெலிவரி செய்து வருகிறார். 

டெலிவரி செய்யும் மாற்றுதிறனாளி

இந்த வீடியோவை பார்த்துவிட்டு ராமுவையும் அவருக்குப் பணி வழங்கிய நிறுவனத்தையும் நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ‘மனித வாழ்க்கை மிக மோசமானது என நினைக்கும் பலருக்கும் இவர் ஒரு எடுத்துக்காட்டு’ என்றும் ‘இது போன்றவர்களுக்கு அனைத்து நிறுவனங்களும் பணி வழங்கி உதவி செய்ய வேண்டும்’, இவர்தான் நிஜ ஹீரோ. வாழ்த்துகள்’ ‘ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்’ எனக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.