தோல்வியில் முடிந்த `ஜனாதிபதி சந்திப்பு’ பிளான்! - மம்தா, சந்திரபாபு நாயுடு சந்திப்பில் நடந்தது என்ன? | mamta was strong in her decision regarding alliance with Congress

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (21/05/2019)

கடைசி தொடர்பு:11:02 (21/05/2019)

தோல்வியில் முடிந்த `ஜனாதிபதி சந்திப்பு’ பிளான்! - மம்தா, சந்திரபாபு நாயுடு சந்திப்பில் நடந்தது என்ன?

17-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகிவிட்டன. இன்னும் இரண்டு நாள்களில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும். ஆனால், அதற்கு முன்னதாகத் தேர்தல் களம் அக்னி வெயிலைக் காட்டிலும் சூடுபிடித்துள்ளது. 

பாஜக - காங்கிரஸ்

ஒருபக்கம் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மறுபக்கம், பா.ஜ.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைக்கு ஏற்பாடுசெய்திருக்கிறது. அத்தோடு, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா விருந்து கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில்தான், நேற்று மீண்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்தித்தார்  சந்திரபாபு நாயுடு. முன்னதாக, அமராவதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ``கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை சந்தித்துவிட்டு டெல்லி சென்று, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க உள்ளேன். அதன் பின்னர், ஜனாதிபதியைச் சந்திப்பது தொடர்பாக முடிவெடுப்போம்” என்றார். 

மம்தா

சந்திரபாபு நாயுடு, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே ஜனாதிபதியைச் சந்தித்து, கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என மாநிலக் கட்சிகளின் ஒப்புதல் கடிதத்தை வழங்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டுள்ளார். பா.ஜ.க கூட்டணிக்கு 200 இடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்றும், இதனால் பா.ஜ.க கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரிய வித்தியாசம் இருக்காது எனவும்  சந்திரபாபு நாயுடு நம்புவதாகக் கூறுகின்றனர், அவருக்கு நெருக்கமானவர்கள். இதன்மூலம், மாநிலக் கட்சிகளின் உதவியுடன் பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற முடியும் என்ற நோக்கில்தான் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே ஜனாதிபதியைச் சந்திக்கத் திட்டமிட்டார். 

சந்திரபாபு நாயுடு -  மம்தா

Photo: PTI

ஆனால், நேற்றைய சந்திப்பு சந்திரபாபுவுக்கு சாதகமாக அமையவில்லை. மம்தா வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு கூட்டணி குறித்துப் பேசலாம் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. மம்தா பானர்ஜி, கருத்துக்கணிப்பு முடிவுகள் மக்களின் மனநிலையைப் பிரதிபலித்ததாகத் தெரியவில்லை. அதனால், தற்போதே ஜனாதிபதியைச் சந்திப்பது எந்தப் பலனையும் தராது என உறுதியாகச் சொல்லிவிட்டார். 

இது தொடர்பாக பிடிஐ செய்தி ஊடகம்,  ``தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மெகா கூட்டணி குறித்து விரிவாகப் பேசலாம்” என்பதோடு இந்தக் கூட்டம் முடிந்துவிட்டது என் று தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு முடிந்த பின்னர், மம்தாவோ அல்லது சந்திரபாபு நாயுடுவோ செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது எந்தக் கட்சி என்ன திட்டம் தீட்டினாலும், அனைத்தும் மக்கள் வழங்கும் தீர்ப்பை வைத்துத்தான் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும். பா.ஜ.க கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில், இவ்விரண்டு கூட்டணியிலும் அங்கம் வகிக்காத மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.