‘விமர்சிக்காதீர்கள்; அவர்கள் சரியாகவே செய்கிறார்கள்!’ - காங்கிரஸுக்கு எதிராக பிரணாப் கருத்து | perfect conduct of elections by all Election Commissioners says Pranab Mukherjee

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (21/05/2019)

கடைசி தொடர்பு:11:50 (21/05/2019)

‘விமர்சிக்காதீர்கள்; அவர்கள் சரியாகவே செய்கிறார்கள்!’ - காங்கிரஸுக்கு எதிராக பிரணாப் கருத்து

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று, கடந்த 19-ம் தேதியோடு நிறைவுபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் பல குளறுபடிகள் நடப்பதாகவும், தேர்தல் ஆணையம் ஆளும் மத்திய அரசுக்கு சாதகமாகச் செயல்படுவதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

தேர்தல் ஆணையம்

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “தொடக்கத்தில் தேர்தல் பத்திரங்கள், வாக்கு இயந்திர மோசடி, நமோ டிவி, மோடி ஆர்மி, இறுதியில் கேதார்நாத்தில் மோடி நடத்திய நாடகம் வரை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது,  மோடி மற்றும் அவரது கும்பலிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டது என இந்திய மக்களுக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. தேர்தல் ஆணையம்மீது இருந்த பயமும் மரியாதையும் போய்விட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். 

ராகுல் ட்வீட்

இப்படி அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்துவரும் நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக அவர்களைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரணாப், “இந்தியாவில் நிறுவனங்களை வலுப்படுத்த விரும்பினால், இந்த நாட்டில் நிறுவனங்கள் நல்ல முறையில் செயல்படுகின்றன என்பதை நினைவில்கொள்ள வேண்டும். அதேபோல, இத்தனை ஆண்டுகளாக நம் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது என்றால், அதற்குத் தேர்தல் ஆணையம் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கிறது. 

பிரணாப் முகர்ஜி

தொடக்கத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுகுமார் சென் முதல் தற்போது தேர்தல் ஆணையராக இருப்பவர்கள் வரை அனைவரும் சிறந்த முறையில் தங்களின் பணிகளைச் செய்துள்ளனர். தேர்தல் ஆணையர்களை நீங்கள் விமர்சிக்காதீர்கள்; அவர்கள் சரியாகவே செயல்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து, காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.