`நம்பாதீங்க, உங்களது நம்பிக்கையைக் குலைக்கும் சூழ்ச்சி இது!' - பிரியங்கா வெளியிட்ட வீடியோ | Congress party men to stay alert and cautious and exuded confidence - Priyanka Vadra

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (21/05/2019)

கடைசி தொடர்பு:13:23 (21/05/2019)

`நம்பாதீங்க, உங்களது நம்பிக்கையைக் குலைக்கும் சூழ்ச்சி இது!' - பிரியங்கா வெளியிட்ட வீடியோ

``நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகள் மற்றும் வதந்திகளைக் காங்கிரஸ் தொண்டர்கள் நம்ப வேண்டாம். காங்கிரஸ் தொண்டர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் சூழ்ச்சியாகும்'' என்று  பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் தேர்தலில் ஆற்றியுள்ள கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும், யாரும் நம்பிக்கையை இழக்காமல் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரியங்கா

"இத்தகைய வதந்திகளும் கருத்துக்கணிப்புகளும் உங்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் ஒரு சூழ்ச்சியாகும். அவற்றையெல்லாம் புறந்தள்ளி, வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளிலும் தொடர் கண்காணிப்புடனும் விழிப்புடனும் நீங்கள் இருக்க வேண்டும். நம்முடைய கடின உழைப்புக்குக் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா.

பெரும்பாலான தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள், பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பின்தங்கும் என்றும் தெரிவித்து வெளியிடப்பட்டிருந்தன. இந்தக் கருத்துக்கணிப்புகள் தொடர்பான பல்வேறு மாறுபட்ட கருத்துகளும் நாடு முழுவதும் எழுந்தவண்ணம் உள்ளன.

இதனிடையே, மேற்குவங்க மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தன்னுடைய ட்விட்டர் பதிவில், "தேர்தல் கருத்துக்கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆயிரக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றுவதோ, அவற்றில் முறைகேடு செய்வதோ இந்தத் தகவலின் பின்னணியில் உள்ள பிளான் எனக் கருதுகிறேன். எனவே, அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒற்றுமையுடனும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சூழ்நிலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க