நடிகர் திலீப் ஹோட்டலில் தரமற்ற உணவு பறிமுதல்! -சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை | rotten foods are seized from actor Dileep's hotel

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (21/05/2019)

கடைசி தொடர்பு:19:15 (21/05/2019)

நடிகர் திலீப் ஹோட்டலில் தரமற்ற உணவு பறிமுதல்! -சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடிகர் திலீப் நடத்திவரும் ஹோட்டலில் உண்ணத் தகுதியற்ற வகையில் தரமற்ற உணவுப் பொருள்கள் இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

நடிகர் திலீப் ஹோட்டல்

கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப், அந்த வழக்கின் விசாரணையைச் சந்தித்து வருகிறார். அவர் துபாய், தோகா, கொச்சின், கோழிக்கோடு ஆகிய இடங்களில் `தி புட்டு’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். பாரம்பர்யமான புட்டு வகைகள் மட்டுமல்லாமல் அசைவ உணவுகளும் இந்த ஹோட்டலில் மிகவும் பிரசித்தம். 

இந்த நிலையில், அவரது ஹோட்டலில் பரிமாறுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள் அனைத்தும் உண்பதற்குத் தகுதியற்றவை எனக் கேரள மாநில சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். உணவு விடுதியில் சாப்பிட்ட பலர் அதிகாரிகளுக்குப் புகார் செய்ததைத் தொடர்ந்து நடந்த சோதனையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. 

கோழிக்கோடு நகரில் உள்ள ஹோட்டலில் அதிகாரிகள் சோதனையிட்டபோது சிக்கன், சிக்கன் ஐஸ்கிரீம் போன்றவை கெட்டுப் போன நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனால் சுகாதார மேற்பார்வையாளர் கே.கோபாலன், சுகாதார ஆய்வாளர் கே.திலீப்குமார் ஆகியோர் தலைமையில் சென்ற குழுவினர், கெட்டுப்போன உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். 

ஹோட்டல் தி புட்டு

பின்னர் அந்த உணவுகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், அவை உண்பதற்குத் தகுதியில்லாதவை என்பது தெரியவந்ததால் அவற்றை அழித்தனர். கேரளாவின் நகராட்சிச் சட்டப்படி சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அதனால் அந்தச் சட்டப்படி உரியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.