`அந்த மாம்பழம் என் வீட்டில் மட்டுமே கிடைக்கும்!' - மாடித்தோட்டத்தில் அசத்தும் கேரளா விவசாயி | Kerala farmer produces a old mango variety

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (21/05/2019)

கடைசி தொடர்பு:20:00 (21/05/2019)

`அந்த மாம்பழம் என் வீட்டில் மட்டுமே கிடைக்கும்!' - மாடித்தோட்டத்தில் அசத்தும் கேரளா விவசாயி

வீட்டில் தோட்டம் அமைக்க இடம் இல்லாவிட்டால் என்ன? மொட்டை மாடி இருக்கிறதே என்று சொல்லும் அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் உலக மக்களிடையே பெருகி வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சி அருகே ஜோசப் எனும் விவசாயி வீட்டின் மாடிப் பகுதியில் ஒரு மினி பழத்தோட்டத்தை அமைத்திருக்கிறார். கொச்சியை அடுத்த புத்தன்பரம்பில் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜோசப் பிரான்சிஸ். அடிப்படையில் தொழில்நுட்ப வல்லுநரான இவரின் ஆர்வம் மரம் வளர்ப்பின்மீது திரும்பிய நேரத்தில் புதிய யுக்தியாக மாடித்தோட்டத்தில் மாமரங்களை வளர்த்து, மாம்பழம் பறிக்க ஆரம்பித்திருக்கிறார். 

கேரள விவசாயி - மாம்பழம்

இதை அமைப்பதற்கு வெளியில் எங்குமே பயிற்சிக்குச் சென்றதில்லை. தனது மொபைலில் உள்ள யூடியூப் மூலம் தோட்டம் அமைக்கக் கற்று, இன்று மாடித்தோட்டத்தில் பழ மரங்களை வைத்துப் பராமரித்து வருகிறார். பழத்தோட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட வகையான மாமரங்களைக் கூடுதலாக வளர்த்து வருகிறார். பழத்தோட்டத்தில் உள்ள தாவரங்கள் நைட்ரேட் மற்றும் சமநிலையான பி.எச் உடைய அக்வாபோனிக் (Aquaponic) நீரினால் ஊட்டம் கொடுத்துவருகிறார். அனைத்து தாவரங்களுக்கும் நைட்ரஜன் பாஸ்பரஸ் - பொட்டாசியம் உரம் இடுகிறார். மகரந்தத்துக்காக அவரது மாடியின் இரு பக்கங்களிலும் இரண்டு தேனீக் குழுக்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இந்தச் செயல் கேரளாவின் விவசாயத் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து ஜோசப் கூறுகையில், ``வேளாண்மை பற்றிய அனைத்தையும் யூடியூப் வீடியோக்களில் இருந்துதான் கற்றுக்கொண்டேன். தற்போது களிமண், சரளைக் கற்கள், உரம் ஆகியவை நிரப்பப்பட்ட 200 லி டிரம்களில்தான் மாமரங்களை வளர்த்து வருகிறேன். நான்கு அடி உயர அளவில் மாமரங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளேன். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படவில்லை. அனைத்துக்கும் நாள் ஒன்றுக்கு 10 நிமிடங்கள் மட்டும் நீர் பாய்ச்சுகிறேன். ஒவ்வொரு மா மரத்திலிருந்து விளைவிக்கப்படும் மாம்பழம் மூலம்  600 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். மாமரத்தின் வேர்கள் டிரம்களில் இருந்தாலும் அவற்றின் வளர்ச்சியில் எந்தவித வீழ்ச்சியும் இல்லை. எனக்கு விருப்பமான மாம்பழங்களில் ஒன்றான `பெட்ரீசியா' வகை மாமரங்களை வைத்திருக்கிறேன். அதற்கு என் மனைவியின் பெயரை வைத்துள்ளேன். `பெட்ரீசியா' மற்ற வகைகளைவிட 35 சதவிகிதம் இனிப்பான ஒன்று. நீங்கள் சந்தையில் மற்ற மாம்பழங்களை மட்டுமே பெற முடியுமே தவிர, பெட்ரீசியாவை நீங்கள் என் வீட்டில் மட்டுமே பெற முடியும்" என்றார்.