`கருணாநிதி கருத்தையே நானும் சொல்கிறேன்!’ - கருத்துக்கணிப்புகள் குறித்து கனிமொழி | kanimozhi speaks about exit poll

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (21/05/2019)

கடைசி தொடர்பு:22:00 (21/05/2019)

`கருணாநிதி கருத்தையே நானும் சொல்கிறேன்!’ - கருத்துக்கணிப்புகள் குறித்து கனிமொழி

`கருத்துக்கணிப்புகள் தொடர்பாக கருணாநிதி என்ன சொன்னாரோ நானும் அதையே வழிமொழிகிறேன்’ என்று கனிமொழி கூறியுள்ளார். 

கனிமொழி

மக்களவைத் தேர்தல் நடந்த முடிந்த நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இதனிடையே ஊடகங்களில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் விமர்சித்துள்ளனர். அது மட்டுமல்லாது வாக்குப் பதிவு எந்திரங்கள் வடமாநிலங்களில் மாற்றப்படுவது தொடர்பாக புகாரும் எழுந்தது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டும் என்று கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில்  22 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி, ``வாக்குப்பதிவு எந்திரங்கள் பல இடங்களில் மாற்றப்பட்டு, புதிய எந்திரங்களைக் கொண்டுவருகிறார்கள்.

தேர்தல் ஆணையம்

ஓட்டல்களிலும், வீடுகளிலும் ஈவிஎம் எந்திரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற குழப்பங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தக் குழப்பத்தையும், எங்கள் சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலே விவிபாட் எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும் சரிபார்க்க வேண்டும்” என்றார்.

கருத்துக்கணிப்புகள் குறித்து கேட்டபோது, ``‘கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை’ என்ற கருணாநிதி கருத்தையே நானும் சொல்கிறேன். எங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், கருத்துக் கணிப்பில் நம்பிக்கையில்லை என ஸ்டாலினும் கூறியுள்ளார். சந்தேகத்துக்கு இடமில்லாத தேர்தலாக இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.