`2 நாள்கள்; 200 நாட்டிக்கல் மைல் தேடல்' - ரூ.600 கோடி போதைப்பொருளுடன் சிக்கிய பாகிஸ்தான் படகு! | ICG apprehends Pakistan fishing boat with narcotic substance worth 600 crores in Gujarat coast

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (21/05/2019)

கடைசி தொடர்பு:09:59 (22/05/2019)

`2 நாள்கள்; 200 நாட்டிக்கல் மைல் தேடல்' - ரூ.600 கோடி போதைப்பொருளுடன் சிக்கிய பாகிஸ்தான் படகு!

இந்தியக் கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடிப் படகு ஒன்றை கடற்படை அதிகாரிகள் சிறைப்பிடித்திருக்கிறார்கள். அந்தப் படகிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். 

பாகிஸ்தான் மீன்பிடிப் படகு

Photo: Indian Coast Guard

குஜராத் எல்லைப் பகுதியை ஒட்டிய கடற்பகுதி வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி செய்வதாக, இந்திய கடலோரக் காவல்படைக்கு, கடந்த 19-ம் தேதி தகவல் கிடைத்திருக்கிறது. இதேபோன்றதொரு எச்சரிக்கை, வருவாய் புலனாய்வுப் பிரிவிடமிருந்து கடலோரக் காவல்படைக்கு 20-ம் தேதி கிடைத்திருக்கிறது. இந்தத் தகவல்களால் உஷாரான கடலோரக் காவல்படை, குஜராத் கடற்பகுதியில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியது.

பாகிஸ்தான் படகு

Photo: Indian Coast Guard

இதுகுறித்துப் பேசிய கடலோரக் காவல்படையில் கூடுதல் டைரக்டர் ஜெனரல் மூர்த்தி, ``குஜராத் கடல் பகுதியில் வேகமாக ரோந்துப் பணியில் ஈடுபடும் அரஞ்செய் எனும் படகு உட்பட, 3 ரோந்துப் படகுகளைப் பணியில் ஈடுபடுத்தினோம். அதேபோல, விமானம் ஒன்றையும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தினோம். 2 நாள்கள் தீவிரத் தேடுதலை அடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த `அல்-மதீனா' என்ற மீன்பிடிப் படகு ஒன்றை ரோந்துக் கப்பல்கள் கண்டுபிடித்தன. அந்தப் படகை தடுத்து நிறுத்தியபோது, அது இந்திய எல்லைக்குள் 8 நாட்டிக்கல் மைல் தூரம் உள்ளே வந்திருந்தது. 

பாகிஸ்தான் படகு

Photo: Indian Coast Guard

அந்த மீன்பிடிப் படகு, கடலோரக் காவல்படையின் பார்வையிலிருந்து தப்ப முயன்றது தெரியவந்தது. கடல் சீற்றமாக இருந்தநிலையிலும் அந்த மீன்பிடிப் படகு சிறைப்பிடிக்கப்பட்டது. படகு பிடிபட்டதும், அதிலிருந்து சில சந்தேகத்திற்கிடமான பொருள்கள் கடலில் தூக்கி வீசப்படுவதைக் கண்டுபிடித்தோம். அவ்வாறு கடலில் வீசப்பட்ட 7 பாக்கெட்டுகளுடன் சேர்த்து மொத்தம் 194 பாக்கெட்டுகள் அந்தப் படகிலிருந்து கைப்பற்றப்பட்டன. அவை எந்த வகையான போதைப்பொருள்கள் என்பதுகுறித்து விசாரணை  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது'' என்றார்.

பாகிஸ்தான் படகு

Photo: Indian Coast Guard

அவற்றின் மதிப்பு ரூ.600 கோடி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குஜராத் கடல் எல்லையில், சுமார் 200 நாட்டிக்கல் மைல் தொலைவு, இரண்டு நாள்கள் தொடர் தேடுதல் வேட்டைக்குப் பின், அந்தக் குறிப்பிட்ட மீன்பிடிப் படகை கடலோரக் காவல்படை சுற்றிவளைத்திருக்கிறது. படகில் இருந்த 6 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் புலனாய்வுத் துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கிறார்கள். பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல், கடல்வழியாகக் கடத்தப்படுவதை இந்திய கடலோரக் காவல்படை கண்டுபிடிப்பது நடப்பு ஆண்டில் இது இரண்டாவது முறையாகும். 100 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் படகு ஒன்றை கடலோரக் காவல்படை கடந்த மார்ச் மாதம் சுற்றிவளைத்து சிறைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.