``கேன்சல் ஆகும் உணவுகள் ஏழைக் குழந்தைகளுக்கு..!” - பாராட்டு மழையில் டெலிவரி பாய் | Kolkata Food Delivery Guy Who Gives Food From All Cancelled Orders,

வெளியிடப்பட்ட நேரம்: 07:35 (22/05/2019)

கடைசி தொடர்பு:20:46 (22/05/2019)

``கேன்சல் ஆகும் உணவுகள் ஏழைக் குழந்தைகளுக்கு..!” - பாராட்டு மழையில் டெலிவரி பாய்

உணவு

ஏதோ ஒரு வகையில் நாமெல்லாம் கொடுத்தவைத்தவர்கள்தான். நமக்கு, அடுத்த வேளை உணவுக்கு நிச்சயம் இருக்கிறது. நம்மைச் சுற்றி உறவுகள் இருக்கிறார்கள். `சாப்டியா’ என்று கேட்க சொந்தங்கள் இருக்கின்றன. நாம் இங்கு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வேளையில்தான் எத்தனையோ பேர் சிங்கிள் டீக்குக் கூட வழியில்லாமல் இருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளால் ஒருநாளைக்கு ஒருவேளை சாப்பிடுவதே அபூர்வமாக உள்ளது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். அவர்களும் சாப்பிட வேண்டும் என்று தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் அவர்களுக்காகவே செலவு செய்துகொண்டிருக்கிறார், கொல்கத்தாவில் தற்போது ஜொமெட்டோ ஊழியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் சாஹா. 


ஜொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தால், அந்த உணவை அப்படியே கொண்டுவந்து, கொல்கத்தாவில் உள்ள ஏழைச் சிறுவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். இந்தப் பயணம் எப்படி ஆரம்பித்தது என்பதுகுறித்து விளக்கும் சாஹா, ``நான்கு ஆண்டுகளுக்கு முன் தம்தம் கண்டோன்மென்ட் அருகில் உள்ள தெருவை கடக்கும்போது, வாலிபர் ஒருவர் என் காலடியில் வந்து விழுந்து பணம் தருமாறு கெஞ்சினார். போதையில் இருக்கிறார். போதைக்காகத்தான் பணம் கேட்கிறார் என்று நினைத்து அவரைத் தள்ளிவிட்டு, அடித்தும்விட்டேன். அந்தச் சம்பவம் பெருமளவில் என்னைப் பாதித்தது. பின்னர் அவர், `நான் போதையில் இல்லை. நான் காசில்லாமல் வெறும் கையுடன் வீட்டுக்குச் சென்றால், என் தாய் என்னைக் கொன்றுவிடுவாள்” என்று அந்த இளைஞன் கூறினான். இந்தச் சம்பவம் என்னை விடாமல் துரத்தியது. இதுதான் என்னை இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் விதையாக அமைந்தது’ என்கிறார். 

சாஹா கொல்கத்தா மாநகராட்சி ஊழியராக இருந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்கு உதவ வேண்டும் என்பதற்காக வேலையைத் துறந்தவர். கல்வி கற்கமுடியாமல் தவித்துவரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வகுப்பும் எடுக்கிறார். அதில் பல குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அவர், ஜொமேட்டோவில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இந்த வேலையின் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு உதவமுடிகிறது என்கிறார். கேன்சல் செய்யும் ஆர்டர்களை அப்படியே, பசியால் வாடும் குழந்தைகளுக்குக் கொடுத்தவிடுகிறார். இவரது செயல்பாடுகளை அறிந்த ரெஸ்டாரன்ட் ஓனர் ஒருவர், மீதமான உணவுகளை குழந்தைகளுக்குத் தர ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜோமெட்டோ டெலிவரி பாய்

``ஜொமேட்டோவில் கேன்சல் செய்யப்படும் ஆர்டர்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்டிலிருந்து கிடைக்கும் உணவுகள் குழந்தைகளுக்கு  உதவுகிறது” என்கிறார். ``நாள் ஒன்றுக்கு ரெஸ்டாரன்ட்டுகளிலிருந்து ஏராளமான உணவுகள் வீணாகிறது. அதில் 1 சதவிகிதம்கூட, உணவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, உணவக உரிமையாளர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்களிடம், ஒரு வேளைகூட சாப்பிட முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்க முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்”என்கிறார்.