``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்!” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’ | ISRO launches PSLVC46 from Satish Dhawan Space Centre

வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (22/05/2019)

கடைசி தொடர்பு:08:58 (22/05/2019)

``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்!” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’

இந்தியாவின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கவும் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும்,  ‘ரிசாட்-2பி’ என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள், இன்று அதிகாலை சரியாக 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 

 ரிசாட்-2பி

PC : ISRO

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ரிசாட்-2பி செயற்கைக்கோள், சுமார் 615 கிலோ எடைகொண்டது. ஐந்து ஆண்டுகள் இதன் ஆயுட்காலம். இது, பூமிக்கு மேலே 557 கி.மீ உயரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், துல்லியமான வானிலை, பேரிடர் மேலாண்மை, ராணுவ பாதுகாப்பு போன்ற பல பயன்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய எல்லைக்குள் நுழையும் விமானங்கள் போன்றவற்றை உளவு பார்க்கவும் இந்த செயற்கைக்கோள் பயன்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணில் பாய்ந்த செயற்கைக்கோள்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெயிஷ்- இ- முகமது அமைப்பின் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில், தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்கள் தகர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதற்காக எந்த ஆதாரங்களும் அரசுத் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடவில்லை. மேகங்களைத் தாண்டி துல்லியமாகப் படமெடுக்கும் திறன் இந்திய செயற்கைக்கோள்களில் இல்லாததால், அரசால் எந்த ஆதாரத்தையும் காட்டமுடியவில்லை என கூறப்படுகிறது.

விண்ணில் பாய்ந்த செயற்கைக்கோள்

ஆனால், தற்போது விண்ணில் பாய்ந்துள்ள இந்த ரிசாட்-2பி செயற்கைக்கோளில் உள்ள ரேடார்கள், மேகக்கூட்டங்களையும் தாண்டி புவியில் நடக்கும் நிகழ்வுகளை மிகவும் துல்லியமாகப் படமெடுக்கும் திறன்கொண்டுள்ளது. நிறைய அம்சங்கள்கொண்ட, முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட  இதுபோன்ற செயற்கைக்கோளை இந்தியா விண்வெளிக்கு அனுப்புவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக ரிசாட்-1 , ரிசாட் -2 ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டிருந்தாலும் அவற்றால் புவியைத் துல்லியமாகப் படமெடுக்க முடியவில்லை. ரிசாட் -1 செயற்கைக்கோள், கடந்த 2017-ம் வருடம் செயலிழந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இஸ்ரோ தலைவர் சிவன்

ரிசாட் -2பி செயற்கைக்கோளைத் தொடர்ந்து, வரும் ஆண்டில் மேலும் ஐந்து ரிசாட் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டம் வகுத்துள்ளதாக, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், ‘ சந்திராயன்-2 விண்கலத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அது வரும் ஜூலை 9 முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். இஸ்ரோ வரலாற்றில் சந்திராயன்-2 செயற்கைக்கோள்தான் மிகவும் சவாலான பணியாக இருந்தது. அது மட்டும் திட்டமிடப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தப்பட்டால், உலக நாடுகள் தொடாத உயரத்தை இந்தியா அடையும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதுபற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ வாழ்த்துகள் இஸ்ரோ. நீங்கள் மீண்டும் மீண்டும் எங்களைப் பெருமையடையச் செய்கிறீர்கள். அனைத்து வானிலையிலும், வானத்தில் இது நமது கண்களாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் ட்வீட்