`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுல்!' - காங்கிரஸ் எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு | Roshan Baig says KC Venugopal is a buffoon

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (22/05/2019)

கடைசி தொடர்பு:12:44 (22/05/2019)

`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுல்!' - காங்கிரஸ் எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு

கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களையும், பா.ஜ.க 104 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றியது. இந்த தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாததால் காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் (ஜே.டி.எஸ்) இணைந்து ஆட்சி அமைத்தன. கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி ஆட்சி நடத்தி வருகிறார். 

காங்கிரஸ்

குமாரசாமி முதல்வராகப் பதவியேற்ற பிறகு அந்த ஆட்சியைக் கலைக்கும்  வேலைகளிலும் இறங்கியது பா.ஜ.க. காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து முயற்சிகளையும் செய்துவந்தது. நாடாளுமன்ற தேர்தலினால் அந்த வேலைகளைச் சற்று ஒத்திவைத்திருந்த கர்நாடக பா.ஜ.க, கருத்துக் கணிப்புகளுக்கு பிறகு மீண்டும் அதைக் கையில் எடுத்துள்ளது. 

கருத்துக் கணிப்புகளின் முடிகளில் மீண்டும் பா.ஜ.க வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் ஆட்சி கலையும் எனக் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் நேற்று கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியுரப்பா, ‘ கங்கிரஸை சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.வில் இணையவுள்ளனர். 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இது நடைபெறும்’ என கூறியிருந்தார். கர்நாடகாவில் இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு பெரிய சர்ச்சையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரே அந்த கட்சி தலைவர்களை மோசமாக விமர்சித்துள்ளார். 

பா.ஜ.க

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகியுமான ரோஷன் பெய்க் , “ நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் தோல்வியடைந்தால் அதற்கு சித்தராமையாவும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் ஆகிய இருவர் மட்டுமே காரணம். கர்நாடகாவின் காங்கிரஸ் மேற்பார்வையாளராக உள்ள கே.சி வேணுகோபால் ஒரு கோமாளி. அவரை போன்ற கோமாளிகளுக்குப் பதவி வழங்கியதற்காக என் தலைவர் ராகுல் காந்தியை நினைத்தால் வருத்தமாக உள்ளது. சித்தராமையா ஒரு திமிர் பிடித்தவர். தினேஷ் குண்டு ஒரு தோல்வியாளர். இதிலிருந்தே தெரியும் இங்கு காங்கிரஸின் தேர்தல் முடிவு. 

ரோஷன் பெயிங்

கர்நாடகாவில் ஒரு கிறிஸ்தவர்களுக்கும் சீட் வழங்கப்படவில்லை, ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் காங்கிரஸ் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். ஒருவேளை மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாம் இஸ்லாமியர்களின் நிலையை புரிந்துகொண்டு மத்திய அரசுடன் சமரசமாக செல்ல வேண்டும்’ எனப் பேசியுள்ளார். இவரின் பேச்சு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்கு எதிராகப் பேசிய ரோஷன் ஒரு வாரத்துக்குள் அதற்காக விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வேளை விளக்கம் அளிக்காத பட்சத்தில் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஷன் பெய்க் பா.ஜ.கவில் இணையவுள்ளதால் தான் இப்படியெல்லாம் பேசுவதாக கர்நாடக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.