முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்! | event held in sri lanka for remembrance on 10 years of eelam genocide at may17

வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (22/05/2019)

கடைசி தொடர்பு:20:56 (22/05/2019)

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்!

இனப்படுகொலை

டல்லாஸ் மாநகரில் கடந்த வெள்ளி (மே 17) அன்று மாலை 4 மணியளவில் தமிழீழ இனப்படுகொலை 10வது ஆண்டு நினைவின் அடையாளமாக ரெட் ஓக் மரம் ஒன்று பிரிஸ்கோ நகரின் பிரிஸ்கோ கமென்ஸ் பூங்காவின் ஏரி அருகே நடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர். இந்த மரத்தின் கீழே வெண்கலத்திலான ஒரு நிரந்தரப் பெயர் பலகை "In memory of Tamils who lost their lives in Mullivaaikkal, Sri Lanka on May 18, 2009" என்ற செய்தியுடன் இன்னும் ஓரிரு வாரங்களில் பதிக்கப்படவிருக்கிறது. இதேநாள் இரவு 9-10 வரை, மறைமலை அவர்கள் நடத்தும் "விசை தமிழ்" வானொலியில் நடைபெற்ற தமிழின அழிப்பு 10வது ஆண்டு நினைவு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்று பிரிஸ்கோவில் நடப்பட்ட நினைவு அடையாள மரம் மற்றும் தொடர்ந்து நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வு பற்றியும் பேசப்பட்டது. 

தமிழர்கள்

மேலும், கடந்த ஞாயிறு (மே 19) அன்று மாலை 6 மணிக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழர் இன அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதற்கு எதிர்பார்க்காத அளவில் மிகுந்த எண்ணிக்கையில் மக்கள் வந்திருந்து, 10 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கொடூர தமிழ் இனப் படுகொலையை, தமிழ் இன அழிப்பை நினைவுகூர்ந்து, தியாகச் சுடர் ஏற்றி, மெழுகுவத்தி ஏந்தி சில நிமிடம் அமைதிகாத்து உயிர்நீர்த்தோருக்கு மலர் வணக்கம் செலுத்தினர். இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர், மலேசிய தமிழர் என்றில்லாமல், அனைவரும் தமிழர்களாய் ஒன்றிணைந்து இந்த மாபெரும் துக்க நிகழ்வை நினைவுகூர்வதின் அவசியத்தையும், அது நாம் செய்யவேண்டிய கடமை என்பதையும் உணர்ந்து வந்திருந்து மரியாதை செலுத்தினர். 

திரளாக கலந்துகொண்ட சிறுவர், சிறுமியருக்கு பெற்றோரிடமும், மற்றவர்களிடமும் இந்நிகழ்வைப் பற்றிய செய்திகளைக் கேட்டு தெரிந்து முழு புரிதலை ஏற்படுத்திக்கொண்டனர். இந்நிகழ்வில் பலர் இதைப்பற்றிய துக்க நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்துகொண்டனர். மூன்று மணிநேரத்துக்கும் மேலாக அனைவரும் கூடி நின்று இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எவ்வாறு உதவுவது, அங்கு அவர்கள் படும் அவலங்களை எவ்வாறு களைவது என்றும், ஈழத்தமிழர்களின் மாநில சுயநிர்ணய உரிமை, ஈழப் பொது வாக்கெடுப்பு, இலங்கை அரசின் போர் குற்றம் போன்றவற்றுக்கு உலக நாடுகளின் உதவியைக் கேட்பது மற்றும் அழுத்தம் கொடுப்பது பற்றிய கலந்துரையாடல் நடத்தினர். 

தமிழர்கள்

இந்த நிகழ்வின் செலவுக்கான பணத்தை GoFundMe என்ற வலைதளத்தின் மூலமாக அமெரிக்க தமிழர்களிடம் தானமாகப் பெற்று நடத்தி முடிக்கப்பட்டது. அதிகப்படியாக சேர்ந்த $400-க்கும் அதிகமான பணத்தை இலங்கையில் தமிழர்களுக்கு மருத்துவ சேவை செய்யும் தொண்டு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. 

இதேபோல், ஒவ்வோர் ஆண்டும், இதே அடையாள நினைவு மரத்தின் கீழ், தமிழன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவோம் என்று முடிவு செய்யப்பட்டது.  தன்னார்வலர்கள் முன்னின்று இந்த நினைவேந்தலை நடத்தி அதிக அளவு மக்களை ஒன்றுகூடச் செய்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க