இவரிடம் தேசியக் கட்சிகள் நெருங்க முடியாது! - சிக்கிம் முதல்வரின் வெற்றி ஃபார்முலா | Sikkim political history Chamling is currently the longest serving Chief Minister for any Indian State

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (23/05/2019)

கடைசி தொடர்பு:12:40 (23/05/2019)

இவரிடம் தேசியக் கட்சிகள் நெருங்க முடியாது! - சிக்கிம் முதல்வரின் வெற்றி ஃபார்முலா

பவன் குமார்

வடகிழக்கு மாநிலமான சிக்கிம், தனது அரசியல் வரலாற்றில் தேசியக் கட்சிகளுக்கு இதுவரை வாய்ப்பளிக்கவில்லை. மாநில கட்சிகளே இங்கு அதிகாரத்தில் உள்ளன.  தனிநாடாக இருந்த சிக்கிம், 1975-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. 1979-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இருந்து இதுவரை, மாநில கட்சியே அதிகாரத்தில் உள்ளது. இங்கு, பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி, 1994-ல் மாநிலத்தின்அதிகாரத்தைக் கைப்பற்றியது.  அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில்  வெற்றிவாகை சூடிவரும் பவன்குமார், சுமார் 25 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்துவருகிறார். சிக்கிம்மில், மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இங்கு, 32 சட்டமன்றத் தொகுதிகளும் 1 நாடாளுமன்றத் தொகுதியும் உள்ளன.

சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியில் இருந்து விலகிய  முன்னாள் அமைச்சர் பிரேம் சிங் தமங்,  ‘சிக்கிம் கிராந்திகார் மோர்ச்சா’ என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த 2014 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சி, 10 இடங்களில் வெற்றிபெற்றது.  இந்த முறை  ‘சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி’, சிக்கிம் கிராந்திகார் மோர்ச்சா, கடுமையான சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கால்பந்து வீரர் பாய்ச்சங் பூட்டியா,  ‘ஹம்ரே சிக்கிம் கட்சி’யைத் தொடங்கினார். அவரும் இந்த முறை களத்தில் இருக்கிறார். இங்கு காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசியக் கட்சிகளுக்கு  இதுவரை வாய்ப்பளிக்கவில்லை.  இந்த முறை சிக்கிம்மில் யார் ஆட்சியைக் கைப்பற்றப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் அதிக வருடம் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பவன்குமார் தக்கவைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பவன்குமார் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.