மோடி அலை 2.0… ஆனால், தென்னிந்தியாவின் ரியாக்ஷன் இதுதான்! #LokSabhaElections2019 | BJP's performance in south indian states #LokSabhaElections2019

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (23/05/2019)

கடைசி தொடர்பு:15:46 (23/05/2019)

மோடி அலை 2.0… ஆனால், தென்னிந்தியாவின் ரியாக்ஷன் இதுதான்! #LokSabhaElections2019

542 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதில் 342 இடங்களில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதற்கடுத்ததாக காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களிலும், கூட்டணியில் அல்லாத கட்சிகள் 110 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதில் பா.ஜ.க-வுக்கு கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ், பல்வேறு மாநிலங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

மோடி அலை 2.0

இப்படி பெரும்பாலான மாநிலங்களில் மோடி அலை வீசினாலும், தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகா மட்டும்தான் பா.ஜ.க-வுக்கு கைகொடுத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி பெரியளவில் சோபிக்கவில்லை. அதேசமயம் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கும் 90 இடங்களில், தமிழகம் மற்றும் கேரளாதான் பெருமளவு கைகொடுத்துள்ளது.

தமிழகம்:

வேலூர் தொகுதி தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் 10 இடங்களும் அடக்கம். பா.ஜ.க நேரடியாகப் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்குப் பின்னடைவுதான்.

வெற்றி கொண்டாட்டத்தில் தி.மு.கவினர்

கேரளா:

சபரிமலை விவகாரத்தால் பா.ஜ.க-வும், ராகுல்காந்தியின் வரவால் காங்கிரஸும் இங்கே உத்வேகம் பெறலாம் என கணிக்கப்பட்டது. ஆனால், இதிலும் பா.ஜ.க-வுக்கு ஏமாற்றமே. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிதான் இங்கே 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரிகளின் கூட்டணி 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க கூட்டணி எங்குமே முன்னிலை வகிக்கவில்லை.

ஆந்திரா:

மொத்தம் 25 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜ.க, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகிய ஐந்து முக்கிய கட்சிகளும் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டன. இதில் 25 இடங்களிலும் முன்னிலைபெற்றுள்ளது ஜெகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்தான். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்குதேசமும் இங்கு சோபிக்கவில்லை. மேலும், நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இங்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதிலும் ஜெகனுக்கே ஜெயம்.

ஜெகன்மோகன் ரெட்டி

தெலங்கானா:

இங்கு தேசிய கட்சிகளுக்கு சவாலாக விளங்குவது சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS). எதிர்பார்க்கப்பட்டது போலவே மொத்தமிருக்கும் 17 இடங்களில் 10 இடங்களில் டி.ஆர்.எஸ்-தான் முன்னிலை வகிக்கிறது. 4 இடங்களில் காங்கிரஸும், 3 இடங்களில் பா.ஜ.க-வும் முன்னிலை வகிக்கின்றன.

கர்நாடகா:

மோடி அலை 2.0

தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்திருப்பது இந்த மாநிலத்தில் மட்டும்தான். மொத்த தொகுதிகளான 28-ல் பா.ஜ.க 24 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வெறும் மூன்று இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. ஒரு தொகுதியில் மட்டும் பிறகட்சி வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க