மஞ்சள் விவசாயிகளை கண்டுகொள்ளாத டி.ஆர்.எஸ்! - கே.சி.ஆர் மகள் வீழ்ந்த பின்னணி | KCR's daughter K Kavitha trails BJP candidate by 52,000 votes

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (23/05/2019)

கடைசி தொடர்பு:18:26 (23/05/2019)

மஞ்சள் விவசாயிகளை கண்டுகொள்ளாத டி.ஆர்.எஸ்! - கே.சி.ஆர் மகள் வீழ்ந்த பின்னணி

வட மாநிலங்களில் அமோக வெற்றியை நோக்கி முன்னேறி வரும் பா.ஜ.க தென் மாநிலங்களில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி என்றால் அது கர்நாடகாவில்தான். அதன்பிறகு தெலங்கானா மாநிலத்தில்தான். மொத்தமுள்ள 17 தொகுதிகளில் ஆளும் சந்திரசேகர் ராவ்வின் டிஆர்எஸ் 8 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க 4, காங்கிரஸ் 4 என முன்னிலை வகிக்கின்றன. நிஜாமாபாத்தில் போட்டியிட்ட கே.சி.ஆரின் மகள் கவிதா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க வேட்பாளர் அரவிந்த் தர்மபுரியைவிட 52,000 வாக்குகள் பின்னடைந்துள்ளார். கே.சி.ஆரின் மகள் கவிதா மற்றும் டி.ஆர்.எஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்தற்கான காரணங்கள் வெளிவந்துள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சொல்லியடித்தது டி.ஆர்.எஸ். ஆனால், சட்டப்பேரவையில் சிறப்பாக பேசப்பட்ட டி,ஆர்,எஸ் உறுப்பினர்களின் செயல்பாடு மக்களவையில் அவ்வளவு பெரிதாக இல்லை. குறிப்பாக விவசாயிகள் பிரச்னையில் பெரிதாக குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பெரிய பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் வாரணாசியில் மோடிக்கு எதிராக வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்தனர். ஆனால், அவர்கள் செய்யவில்லை. அதேநேரம் நிஜாமாபாத்தில் கவிதாவுக்கு எதிராக 178 மஞ்சள் விவசாயிகள் களமிறங்கினர். மஞ்சள் அதிகமாக விளைவிக்கப்படும் இந்தப் பகுதியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது என்னவோ நிஜாமாபாத்தில் இருக்கும் மஞ்சள் ஆணையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதுதான். எந்த அரசாங்கமும் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. 

ஆனால், இந்த கோரிக்கைக்கு எம்.பி-யாக இருந்த கவிதா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் மொத்தமாக போட்டியிட்டனர். இதனால் நிஜாமாபாத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 12 வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டன.  இது அவருக்கு பெரிய பின்னடைவாக இருந்தது. அதேநேரம் இதை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அரவிந்த் தர்மபுரி  கிரிக்கெட்டர். அந்தப் பகுதியில் அவர் நடத்தி வரும் ஃபவுண்டேஷன் மூலம் அப்பகுதியில் தனி செல்வாக்கை ஏற்படுத்தி வைத்திருந்தார். இது அவருக்கு ஒருவகையில் கைகொடுக்க, கவிதா மீதான விவசாயிகள் எதிர்ப்பு; அதையொட்டிய தீவிர பிரசாரம் ஆகியவை அவரை முன்னிலை பெற உதவியது. 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த அரவிந்த் டி.ஆர்.எஸ் கட்சி சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராக உள்ள ஸ்ரீனிவாஸின் இளைய மகன். கடந்த முறை காங்கிரஸ் கட்சி வேட்பாளரை 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கவிதா இந்த முறை தன் சொந்த கட்சியின் உறுப்பினர் மகனிடமே தோல்வியடைய உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க